தமிழகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திமுக தொடர்ந்த வழக்கு எதிரொலியாக நீதிமன்றம் அந்த தேர்தலை ரத்து செய்தது.
அதன் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும் உறுதியளித்திருந்தது.
அதன்படி தேர்தலை நடத்த இன்று அதற்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv