credit ns7.tv
உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பை எதிர்த்து, திமுக மீண்டும் நீதிமன்றத்தை நாடும், என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பை கடுமையாக எதிர்த்து, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்திற்கு சென்று யாராவது தடை வாங்கட்டும் என்ற உள்நோக்கத்துடன், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
பட்டியல் இனத்தவர், பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும், வார்டு மறுவரையறையினையும், சட்டவிதிமுறைப்படி செய்து, புதிய உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும், என உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவாக கூறியுள்ளதாக, ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்
2017-ம் ஆண்டு வார்டு மறுவரையறை ஆணைய விதிகள் உள்ளிட்ட எதையும் பின்பற்றாமல், மீண்டும் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, அதிமுக அரசின் கைப்பிள்ளையாக மாநில தேர்தல் ஆணையம் மாறியிருப்பது, ஜனநாயகத்திற்கு வெட்கக் கேடு என்றும், திமுக தலைவர் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சரின் சொல்கேட்டு நடக்கும் அதிமுக கிளைச் செயலாளர் போல், மாநில தேர்தல் ஆணையர் மாறியிருப்பது வேதனையளிப்பதாகக் கூறியுள்ள ஸ்டாலின்,
புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு, மாநில தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தாததையும், தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடைப்படையில், வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீட்டை முடித்த பிறகே, உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று, நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர, வேறு வழி இல்லை என்றும், திமுக தலைவர் ஸ்டாலின், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.