ஞாயிறு, 8 டிசம்பர், 2019

டிச.- 27,30 என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்!

credit ns7.tv
Image
ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்கள் தவிர ஏனைய 27 மாவட்டங்களுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, வேட்புமனு தாக்கல் வரும் 9ம் தேதி தொடங்குவதாகவும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் டிசம்பர் 16ம் தேதி என்றும் தெரிவித்தார். வேட்புமனு பரிசீலனை வரும் 17ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 19 கடைசி நாள் என்று தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறியுள்ளார்.  
முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 30ம் தேதியும் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும் என்றும் பழனிசாமி கூறினார். ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முதல்கட்ட வாக்குப்பதிவு 24,680 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 25,008 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 49,688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்தலில் 2,58,70,941 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாகவும்,  ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது என்று தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்