வியாழன், 5 டிசம்பர், 2019

வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் ஜிம்பாப்வே...!

Image
ஜிம்பாபேவில் நிலவி வரும் கடுமையான வறட்சியால் அந்நாடு திக்குமுக்காடி வருகிறது. நிலைமையை சமாளிக்க ஐ.நா தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன...
தொழில்நுட்ப புரட்சியில் போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்த நாடுகள் முன்னேறிக் கொண்டிருக்க தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான ஜிம்பாவே அடுத்த வேலை உணவுக்காக கையேந்தி நிற்கிறது.
சமீபத்தில் வெளியான மெலிந்த யானை ஒன்றின் புகைப்படம் ஜிம்பாபேயின் வறட்சித் தீயை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியது.
அதிக யானைகள் வாழும் நாடுகளுள் ஒன்றான ஜிம்பாபேவில், ஹ்வாங்க்வே தேசிய பூங்காவில் மட்டும் கடந்த மூன்றே மாதங்களில் 200க்கும் அதிகமான யானைகள் செத்து மடிந்துள்ளன.
யானை என்றாலே கம்பீரத் தோற்றத்துடன் பெரிய உருவத்தில் காட்சி அளிக்கும் விலங்கு என்ற நிலை மாறி, எழும்புகள் வெளியேறிய நிலையில் எடுக்கப்பட்ட ஒரு யானையின் புகைப்படம் பலரது மனங்களையும் கரைய வைத்தது.
உயிரினங்களின் நிலைமை இப்படியிருக்க., கால் நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிம்பாப்வே மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் உணவு பஞ்சத்தில் சிக்கியிருப்பதாக ஐ.நா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடும் வறட்சியால், நாட்டில் உள்ள 90 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
7 புள்ளி 7 மில்லியன் மக்களுக்கு  நிரந்தரமற்ற நிலையில் உணவு உள்ளதாக WFP (World Food Programme) எனப்படும்  ஐ.நாவின் உலக உணவு திட்டம் அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் நிதி திரட்டி 2 லட்சத்து 40 ஆயிரம் டன் உணவுகளை 4 புள்ளி 1 மில்லியன் மக்களுக்கு விநியோகிக்க WFP திட்டமிட்டுள்ளது. இதற்காக டான்சானியா மற்றும் மெக்சிகோவில் இருந்து மக்காச்சோள தாணியங்கள், கென்யாவில் இருந்து பருப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் பணியில் WFP மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 
ஜிம்பாப்வேயில் நிலவும் இந்த கடுமையான சூழலுக்கு பருவநிலை மாற்றமும் முக்கிய பங்கு வகிக்கிறது. பருவ நிலை மாற்றத்தால் எதிர்கொள்ள முடியாத அளவு பொருளாதார நெருக்கடி, உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றில் கடுமையான தட்டுப்பாடும் நிலவுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை 600 சதவீதம் உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 8 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் ஜிம்பாப்வேவில் வெட்டப்படுகின்றன. இதனாலேயே ஜிம்பாவேயில் மழை பொழிவு குறைந்து வறட்சி தலை விரித்தாடுகிறது. 
இந்த வறட்சியால் பள்ளி இடைநிற்றல், குழந்தை திருமணம், விபச்சாரம் உள்ளிட்ட குற்றங்களும் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் பஞ்சம்,பசி,பட்டினி ஒருநாட்டை தலைகீழாக புறட்டிப்போட்டிருப்பதற்கு ஜிம்பாபேவே நேரடி சாட்சி.

credit ns7.tv