ஞாயிறு, 31 மே, 2020

COVID 19 INDIA




இவர்கள் தாங்குவார்களா?: கமல. செல்வராஜ்,

முனைவர் கமல. செல்வராஜ்.

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு இடதுகரை சானல் பாய்ந்தோடும் படப்பச்சை முதல் மஞ்சாலுமூடு வரை, சானலின் இரு கரைகளிலும் அரசுக்குச் சொந்தமானப் புறம்போக்குக் நிலத்தில் சில நூறு வீடுகள். பெரும்பாலான வீட்டில் உள்ளவர்கள் காலம்காலமாக வயலில் உழவு, நடவு, களை எடுத்தல், அறுவடை செய்தல் என உழவுத் தொழில் சம்பந்தமான வேலைகள் மட்டுமே அன்றாடம் செய்து வந்தனர்.

காலப்போக்கில் வயல்வெளிகள் குறைந்து அவை அனைத்தும் ரப்பர் தோட்டங்களாகவும், தென்னந் தோப்புகளாகவும் மாறிப்போயின. அதனால் அந்த மக்களும், ரப்பர் பால் எடுத்தல், களையெடுத்தல், புல் பறித்தல், விறகு பொறுக்கி விற்றல் என காலத்தின் கோலத்திற்கு ஏற்றார் போல் தங்களின் அன்றாடத் வேலையை மாற்றிக் கொண்டார்கள்.

இந்த வேலை மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் வருமானம், அவர்களின் அன்றாடத் தேவைகளைக் கஷ்டப்பட்டுப் பூர்த்திச் செய்வதற்குப் போதுமானதாக இருக்குமே தவிர, ஐந்து காசு கூட அவர்களால் மறுநாள் தேவைக்கு மீதி வைக்கவோ அல்லது நீண்ட நாள் சேமிப்பாக வைக்கவோ போதுமானதாக இருக்காது.

என்னுடைய அரை நூற்றாண்டு கால வாழ்க்கை முழுவதுமாக அவர்களோடு அன்னியோன்னியமாகப் பழகியும் வாழ்ந்தும் வருகிறேன். கூடவே அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்தும் வருகிறேன். இன்றுவரை அவர்களின் வாழ்க்கை, அரசுக்குச் சொந்தமானப் புறம்போக்கு நிலத்தில், குடிசைகளில்தான் நகர்ந்து போகிறதே தவிர, ஒரு குடும்பத்தில் ஒருவர் கூட ஒரு சென்ட் நிலத்தைத் தனதாக்கவோ, அல்லது தங்களின் பிள்ளைகளை உயர்படிப்பு படிக்க வைக்கவோ செய்யவில்லை. மட்டுமின்றி, அதிகமாகக் குடிபோதைக்கு அடிமையாகவோ, சினிமா போன்ற கேளிக்கைகளுக்கு அதிகம் செலவிடுவதோ கிடையாது.

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய்நொடிகள் வந்தால் கூட முடிந்த அளவு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுச் சென்று சிகிச்சையளிப்பதற்கான வசதி வாய்ப்புகள் கூட அவர்களுக்குக் கானல் நீர்தான். அதிகமாக சுய மருத்துவம், அதையும் தாண்டிவந்தால் அரசு ஆஸ்பத்திரிதான் அவர்களின் புகலிடம். தலைமுறை தலைமுறையாக இதுதான் அவர்களின் வாழ்க்கைத் தரம்.

இந்த மக்களின் வாழ்க்கை முறையை ஏன், நான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துக் கூறுகிறேன் என்றால். இது என் கண்ணெதிரே அன்றாடம் நடந்தேறிக் கொண்டிருப்பது. அதனால் ஓர் உதாரணத்திற்காக மட்டுமே. இதைப்போன்று நம் இந்தியத் தேசம் முழுவதும் எத்தனையெத்தனை ஊர்கள் இருக்கும், அவற்றில் இது போன்று எத்தனையெத்தனைக் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதனை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் தான் கடந்த இரண்டு மாதக் காலமாக நம் நாட்டில் கொரோனா தொற்றினால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு, இந்த மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளார்கள். ஒரு நாள் வேலையில்லையென்றால் மறுநாள் உணவுக்கு வழியின்றி தவிக்கும் இது போன்ற மக்களின் நிலைப் பரிதாபத்திலும் பரிதாபம் என்பதை நம் நாட்டு அரசும், அதிகாரிகளும் உணர வேண்டும்.

லாக்டவுனுக்குப் பின் தங்களால் இயன்றவரைத் தாக்குப்பிடித்துப் பார்த்தார்கள். அதன் பின் சேவாபாரதி போன்ற சில சமூக அமைப்புகள் வழங்கிய ஒரு வேளை சாப்பாட்டை மூன்று வேளையாக்கி… பசியும்… பட்டினியுமாக… மாதங்கள் இரண்டு உருண்டோடி விட்டது. முதல் மாதத்தில் அரசாங்கம் வழங்கிய இலவச அரிசியும் ஆயிரம் ரூபாயும் இவர்களுக்கு ஓரளவுக்கு ஆறுதலாக இருந்தது. இரண்டாவது மாதத்தில் கூடுதலாக அரிசி மட்டுமே வழங்கப்பட்டது. வெறும் அரிசியால் மட்டுமே வாழ்க்கையை ஓட்டுவது என்பது எவ்வளவு சாத்தியமாகும்?

இந்த நேரத்தில் அரசு இன்னும் கூடதலாக தமிழக மக்களுக்கு உதவியிருக்க முடியும். நமது அண்டை மாநிலமான கேரள அரசு லாக்டவுனை மிகவும் கடுமையாகப் பாவித்தது. மக்களும் அதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர் என்பது உலகறிந்த உண்மை. அதற்குக் காரணம், அந்த அரசு லாக்டவுன் தொடங்கிய உடன், ஒவ்வொருக் குடும்பத்திற்கும் ஒரு வாரத்திற்குத் தேவையான நல்ல தரமான அரிசி முதல் மளிகைச் சாமான்கள், காய்கறிகள் வரை அனைத்தையும் பார்சலாக்கி அரசு ஊழியர்களை வைத்து ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கியது.

இதனால் அந்த மாநிலத்தில் மக்கள் லாக்டவுனுக்கு, அரசுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தனர். அதனால் இந்தியாவில் முதல் முதலில் கொரோனா தொற்று அறிமுகமான அம்மாநிலத்தால் மிக எளிதாக, அத்தொற்றை சமாளித்து, இந்தியாவிலையே கொரானோ தொற்றை வெற்றி கொண்ட மாநிலம் என்னும் அந்தஸ்தைப் பெற முடிந்தது. இதைப்போன்று தமிழக அரசும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருந்திருந்தால், மக்களும் இவ்வளவு பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். கூடவே கொரோனாவையும் மிகவும் சாதுர்யமாகச் சமாளித்திருக்க முடிந்திருக்கும்.

அரசு தேர்தல் நேரத்தில் அறிவிக்கும் இலவசங்களை இந்த நேரத்தில் வழங்கியிருந்தால் மக்கள் இன்னும் அதிகமாகத் திருப்தியடைந்திருப்பார்கள். விளிம்புநிலை மக்களும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் நான்காவது முறையாக அறிவிக்கப்பட்ட மே 31 வரையிலான லாக்டவுன் முடிவதற்கு இன்னும் ஒருசில நாள்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் சென்னை உட்பட ஒருசில மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொட்டு வருகிறது. அதனால், லாக்டவுன் தற்பொழுது குறிப்பிட்டிருக்கும் மே 31 அன்று முடிவுக்கு வருமா? இல்லை மீண்டும் நீட்டிக்கப்படுமா? என்ற பீதி அனைத்துத் தரப்பு மக்களையும் கௌவிக் கொண்டுள்ளது.

அவ்வாறு மீண்டும் லாக்டவுன் நீட்டிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், இப்படிப்பட்ட விளிம்புநிலை மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமான நிலைக்குச் சென்று விடும். அதனை தாங்கிக் கொள்ளும் நிலை விளிம்பு நிலை மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இருக்காது என்பது நிதர்சனமான உண்மை.

எனவே தற்பொழுது எய்ட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு அனைத்து மக்களிடமும் உள்ளதைப் போன்று, கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய விழிப்புணர்வும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் உருவாகியுள்ளது. அதனால் அவரவர்களைப் இந்த நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு அனைத்து மக்களுக்கும் உண்டு. அதனால் இனியும் லாக்டவுன் வேண்டிவந்தால், அதை ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் அறிவிக்காமல், எந்தெந்த மாவட்டத்திற்கு அல்லது குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் அறிவித்து விட்டு, மற்ற இடங்களின் லாக்டவுனை விலக்கிக் கொள்வது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனுடையதாக இருக்கும்.

மட்டுமின்றி லாக்டவுன் முடிந்த பிறகு, அதனால் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு அரசு அதிக முக்கியத்துவமளித்து, அவர்களின் நலிந்துள்ள வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com )

மருத்துவ இட ஒதுக்கீடு துயரம்! : ரவீந்திரன் துரைசாமி


இட ஒதுக்கீடுக்கான இன்னொரு போராட்டக் களம் தமிழகத்தில் சூல் கொள்கிறது. மருத்துவக் கல்வியில் அகில இந்திய கோட்டாவுக்கு மாநிலங்கள் ஒதுக்கும் சீட்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) இட ஒதுக்கீடு இல்லை என்பதுதான் இதற்கான காரணம்.

கொஞ்சும் புரியும்படியாக பார்க்கலாம்!

மருத்துவக் கல்வியில் 3 வகைகளில் இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படுகிறது. ஒன்று, மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், மத்திய அரசு இட ஒதுக்கீடு நடைமுறைப்படி மருத்துவக் கல்வி இடங்கள் நிரப்பப்படுகின்றன. மாநிலங்களில் அந்தந்த மாநில இட ஒதுக்கீடு விகிதப்படி மருத்துவக் கல்வி சீட்களை நிரப்புகிறார்கள். இவை இரண்டிலும் இப்போது பிரச்னை இல்லை.

மூன்றாவதாக, மத்தியத் தொகுப்பு! மதுரை அல்லது கன்னியாகுமரியில் ஒரு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்தக் கல்லூரியில் 85 பேரை நீட் மதிப்பெண் மற்றும் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்த்துக் கொள்ளலாம். எஞ்சிய 15 இடங்களை மத்தியத் தொகுப்புக்கு கொடுத்துவிட வேண்டும்.


இதேபோல ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 15 சதவிகித இடங்களை மத்தியத் தொகுப்புக்கு வழங்குவார்கள். இதேபோல முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ் ஆகிய படிப்புகளில் 50 சதவிகித இடங்களை மத்தியத் தொகுப்புக்கு வழங்க வேண்டும்.

இப்படி இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களில் இருந்து பெறப்படும் இடங்களை அகில இந்திய அளவிலான மெரிட் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மத்திய அரசு நிரப்ப வேண்டும். இந்த மத்தியத் தொகுப்பு இடங்களை நிரப்புவதில் எஸ்.சி பிரிவினருக்கான 15 சதவிகித இட ஒதுக்கீடு, எஸ்.டி. பிரிவினருக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீடு, உயர் ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆகியன முறையாக பின்பற்றப்படுகின்றன. ஆனால் இதர பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு மட்டும் கடைபிடிக்கப்படவில்லை.

இப்படி மத்தியத் தொகுப்பில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்க வேண்டிய 11,000-க்கும் அதிகமாக மருத்துவக் கல்வியிடங்கள் பொதுப்பட்டியலுக்கு போயிருக்கிறது. சந்தேகமே இல்லாமல், இது சமூக அநீதி. ஆனால் சிலர் சொல்வதுபோல, இது கடந்த 3 ஆண்டுகளாக மட்டும் நடப்பதல்ல.

மத்தியத் தொகுப்பு நடைமுறைகள் உருவான 2007 மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் இருந்து இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்தியா முழுவதும் இதர பிற்பட்ட வகுப்பினர் பெரிய இழப்பை 13 ஆண்டுகளாக சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதர பிற்பட்ட வகுப்பினர் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், இதை வலியுறுத்தி இதுவரை சாதிக்க முடியவில்லை.

இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடை வழங்காமல் இருப்பதற்கு ஒரு நடைமுறை சிக்கலை மத்திய அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள். அதாவது, எஸ்.சி., எஸ்.டி பட்டியலை நிர்ணயிப்பது மத்திய அரசு என்பதால், அந்தப் பட்டியல் இந்தியா முழுக்க ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் பிற்பட்ட வகுப்பினரை நிர்ணயம் செய்வதில் மாநிலங்களுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இதனால்தான் மத்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியவில்லை எனக் கூறுகிறார்கள்.

இதுவும் ஏற்கத்தக்க சமாதானம் அல்ல. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த மத்தியத் தொகுப்பு இடங்களில் பிற்பட்ட, இதர பிற்பட்ட வகுப்பினருக்கு தமிழகத்தில் 50 சதவிகித இடங்களை ஒதுக்க வேண்டும் என கேட்கிறார். அதாவது, அந்தந்த மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு முறையில் மத்தியத் தொகுப்பு இடங்களை கொடுத்துவிடுங்கள் என்பது இதன் அர்த்தம்.

என்னைப் பொறுத்தவரை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்கள் என்பதால் மத்திய அரசு இட ஒதுக்கீடு முறைப்படி 27 சதவிகித இடங்களையாவது கொடுத்தே ஆகவேண்டும். 2018-ம் ஆண்டு இதர பிற்பட்டோர் ஆணையத்திற்கு நரேந்திர மோடி அரசு, அரசியல் சாசன அந்தஸ்து வழங்கியது. அதாவது, எஸ்.சி, எஸ்.டி கமிஷனைப் போல ஓ.பி.சி கமிஷனும் அதிகாரம் மிக்க அமைப்பாக உருமாறியிருக்கிறது. இந்த இட ஒதுக்கீடை வழங்காத அதிகாரிகள் மீது மேற்படி அமைப்பு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் கொடுத்திருக்கும் புகார் அடிப்படையில் அதற்கான நடவடிக்கை இருக்கும் என்றே நினைக்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தப் பிரச்னையை வலிமையாக முன்னெடுக்கிறார். ஏற்கனவே முற்பட்ட பிரிவு ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடை எதிர்ப்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். தற்போது பிற்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகிதம் கேட்பது, இதற்காக அனைத்துக் கட்சியினரை திரட்டிப் போராடத் தயாராவது ஆகியன திமுக.வுக்கு அரசியல் ரீதியாக உதவிகரமாகவே இருக்கும். கருணாநிதி இருந்திருந்தால்கூட இந்த விஷயத்தில் இவ்வளவு உறுதியாக இருந்திருப்பாரா எனத் தெரியவில்லை.

ராகுல் காந்தி இந்த விஷயத்தில் இதுவரை குரல் கொடுக்கவில்லை. அவரிடம் இதை யாரும் சரியாக எடுத்துச் செல்லவில்லையா? எனத் தெரியவில்லை. மத்தியில் ஆளும் பாஜக, இந்த விஷயத்தில் ராகுல் காந்தி குரல் கொடுக்கட்டும் என்றுகூட காத்திருக்கலாம். காரணம், பிற்பட்ட வகுப்பினருக்கு இந்த இட ஒதுக்கீடை வழங்குவதன் மூலமாக முற்பட்ட வகுப்பினர் அதிருப்தி அடையக்கூடும் என பாஜக நினைக்கலாம். எல்லாமே, அரசியல் கூட்டல், கழித்தல் கணக்குகள்தான்!

(கட்டுரையாளர் ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்- சமூக ஆய்வாளர்)


தமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்தது

இந்த நீட்டிப்பு காலத்தில், சில மனடலங்களைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்து நாளை  (ஜூன் 1ம்) முதல்  இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதன்படி, மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்து 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மண்டலத்திற்குள் மட்டும் பொதுப் போக்குவரத்து இயக்கப்படும். மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும்,  மண்டலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து இருக்காது. தனியார் வாகனத்தில் பயணிக்க விரும்புபவர்கள், வழக்கம் போல இ பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்கலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும் இ- பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

எட்டு மண்டலங்கள் :

 

மண்டலம் I: கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும்  நாமக்கல்.

மண்டலம் II: தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி.

மண்டலம் III: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும்  கள்ளக்குறிச்சி

மண்டலம் IV: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை.

மண்டலம் V: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்.

மண்டலம் VI: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும்  தென்காசி

மண்டலம் VII: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும்  திருவள்ளூர்.

மண்டலம் VIII: சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்.

மண்டலம் VII-ல் உள்ள  செங்கல்பட்டு, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் எட்டாவது மண்டலம் VIII-ல் உள்ள  சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து,  அனைத்து மண்டலங்குக்குள்  50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Unlock 1.0 : வரை தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமல்!

Unlock 1.0 : வரை தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமல்!


கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டது, பின்னர் இது 4வது கட்டமாக மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. நாளையுடன் ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில் Unlock 1.0 என்ற பெயரில் முதற்கட்டமாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது உள்துறை அமைச்சகம்.

ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு:

இதன்படி Containment Zones எனப்படும்
கொரோனா நோய்க்கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் மாவட்ட நிர்வாகங்களே நோய்க்கட்டுப்பாடு பகுதிகளை வரையறை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்க்கட்டுப்பாடு பகுதிகளில் இருந்து, அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற பணிகளுக்காக வெளியே செல்வது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

* அதே போல மாநில/யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடு பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில் சூழலை பொறுத்து தேவைப்படும்பட்சத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்திக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது

இரவில் ஊரடங்கு:

நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து தனி நபர் நகர்வுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இ- பாஸ் தேவையில்லை:

* மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனிநபர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்தத்தடையும் கிடையாது. இதற்காக இ-பாஸ் பெற தேவையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல எந்த மாநில அரசும் சரக்கு போக்குவரத்துக்கு தடை அல்லது இடையூறு விதிக்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.


* எனினும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் இந்த விவகாரத்தில் சூழலை பொறுத்து முடிவு எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது. இது தொடர்பாக விரிவான விளம்பரப்படுத்துதலையும் அந்த அரசுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* பயணிகள் ரயில், ஷ்ராமிக் சிறப்பு ரயில், உள்நாட்டு விமான சேவை, வந்தே பாரத் மிஷன் விமான சேவை போன்றவை வழிகாட்டு நெறிமுறைகள்படி தொடர்ந்து இயக்கப்படும்.


Unlock 1.0 என்ற பெயரில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள்:

ஜூன் 8 முதல் முதற்கட்ட தளர்வுகள்:

* வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி

* ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி

* மேற்கண்ட நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுமுறைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடும்

ஜூலை மாதம் 2ம் கட்ட தளர்வு:

பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்து ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும்.

 

மூன்றாம் கட்டம்:

சர்வதேச விமான சேவை தொடங்குதல், மெட்ரோ ரயில் சேவை, சினிமா திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், மது பான கூடங்கள், அரங்கங்கள்

சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, மத விழாக்கள் மற்றும் இதர கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது குறித்து சூழ்நிலையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

நோய் தாக்கம் எளிதில் பரவக்கூடியவர்களாக கருதப்படும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆரோக்கிய சேது செயலி:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டை அலுவலகங்களில் ஊழியர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தீவிரமாக அமல்படுத்த வேண்டும்:

உள்துறை அமைச்சகத்தின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.


விதிமீறுபவர்களுக்கு தண்டனை:

மேற்கண்ட விதிமுறைகளை மீறுபவர்கள் பேரிடர் மேலான்மை சட்டம் 2005-ன் கீழ் தண்டிக்கப்படுவர்.

வட இந்தியாவை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் வெட்டுக்கிளிகள் படையெடுக்க தொடங்கியுள்ளது: தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின்

கொரோனோ விவகாரத்தில், தமிழக அரசு காட்டி வரும் அலட்சியத்தை, வெட்டுக்கிளி விவகாரத்திலும் தொடரக் கூடாது, என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமேற்கு மாநிலங்களில், பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள், தற்போது தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களுக்க வரத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். பாலைவன வெட்டுக்கிளிகளுக்கும், இங்குள்ள வெட்டுக்கிளிகளுக்கும் வேறுபாடு உண்டு, என அறிவியலாளர்கள் கூறியுள்ளதாகவும், அதன் தாக்கம் குறித்து கவனமாக இருக்க வேண்டும், என அவர்கள் எச்சரித்துள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, வெட்டுக்கிளிகள் விவகாரத்தில் தடுப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை, அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும், என அவர் வலியுறுத்தியுள்ளார். 

ஒரு பனிப்போரை உருவாக்க முயல்கிறது: ஹாங்காங்கின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் குற்றச்சாட்டு

சீனா அதிபர் ஜீ ஜிங்பிங் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து மிகவும் பதற்றம் அடைந்துள்ளதால் ஒரு ஆபத்தான பனிப்போரை உருவாக்க அவர் வழிவகை செய்துவருவதாக ஹாங்காங்கின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் தெரிவித்துள்ளார். 

பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்துவந்த ஹாங்காங் 1997 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் படி சீனாவுடன் இணைந்தது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் படி சீனா ஹாங்காங்கிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என பிரிட்டன் கேட்டுக்கொண்டது. இதனால் தன்னுடன் இணைந்த ஹாங்காங்கிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ள சீனா பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துவருகிறது. 

இதனிடையே சீனாவிடன் இருந்து சுதந்திரம் கோரி ஹாங்காங்கில் கடந்த ஆண்டு முதல் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த போராட்டங்களின் போது ஹாங்காங்கில் உள்ள சீனா கொடிகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் சூரையாடப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த சீன அரசு ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை குறைக்கும் வகையிலான தேசிய பாதுகாப்புச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 


இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த மசோதா சட்டமாக்கப்படவுள்ளது. இது சட்டமாக்கப்பட்டால் ஹாங்காங்கின் சிறப்பு அதிகாரங்கள் ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனிடையே சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஹாங்காங்கின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் கிரிஸ்பார்டன், ஹாங்காங்கில் சீனாவால் நடத்தப்பட்டு வரும் ஒடுக்கு முறைகள் மக்களை நாட்டை விட்டு வெளியேற்ற தூண்டுகிறது என தெரிவித்தார். இது சுந்தந்திரமான ஹாங்காங்கின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல் ஆசியாவில் முதன்மையான சர்வதேச நிதி மையமாக திகழும் ஹாங்காங்கில் திறனையும் கேள்விக்குறியாக்குகிறது என தெரிவித்தார். 

 

இதனால் ஹாங்காங்கில் இருந்து மக்கள் வெளியேறுவதோடு அந்நாட்டின் மூலதனமும் வெளியேறலாம் என அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு நாடுகள் ஜி ஜிங்பிங் ஐ அப்பாவியாக கருதுவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்த அவர், கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து மிகவும் பதற்றம் அடைந்துள்ளதால் ஒரு ஆபத்தான பனிப்போரை உருவாக்க அவர் வழிவகை செய்துவருவதாகவும் குற்றம் சாட்டினார்.

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

நாசாவை சேர்ந்த இரண்டு வீரர்கள், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவன ராக்கெட் மூலம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளனர்.

2003ம் ஆண்டில் அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட் வெடித்த காரணத்தால், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்ப நாசா முடிவு செய்தது. அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் நாசாவுடன் இணைந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டது.

9 ஆண்டு கால முயற்சிக்குப் பின் நாசாவை சேர்ந்த  ராபர்ட் பென்கன் மற்றும் ஹர்லி ஆகிய விண்வெளி வீரர்களுடன், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 என்ற ராக்கெட் புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. முன்னதாக கடந்த வாரம் மழை காரணமாக இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 

இதில் சென்ற இரு வீரர்களும், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை நாளை அடைவார்கள் என்றும் அங்கு அதிகபட்சம் 2 மாதங்கள் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

9 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி!

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை நாளை முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரிக்கப்பட்டு வருகின்றன. 

பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை அடுத்து, தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை நாளை முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  5 வழக்கறிஞர்களை மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும், வழக்கு தொடர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்ற அறைகளில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு பின் இந்த நடைமுறை மறு ஆய்வு செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து தொடக்கம்: நாளை முதல் என்னென்ன தளர்வுகள்!?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஜூன் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,

1) ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:

* வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.


* ·நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

 * தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. 

·* வணிக வளாகங்கள் 

*  பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.

·*  மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

*  மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.

* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (க்ஷயச), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

* மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.


இறுதி ஊர்வலங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள்:

*  இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

* திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.


பொது பேருந்து போக்குவரத்து :

*  மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது 

I. கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும்
நாமக்கல்
II. தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும்
கிருஷ்ணகிரி
III. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி
IV. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,
அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
V. திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும்
இராமநாதபுரம்
VI. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
VII. காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
VIII. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

 

*  மண்டலம் VII-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் மண்டலம் VIII-ல் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

*  மண்டலம் VII மற்றும் மண்டலம் VIII-க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது.


* அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

* பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை.

*  அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது. 


இ-பாஸ் முறை :

3

* அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.

* வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

2) பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

i. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ii. அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க
வேண்டும்.

iii. வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு
பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

iV. மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள  மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

V. டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.


Vi. மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

Vii. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள் TN E-Pass இன்றி பயன்படுத்தலாம்.

Viii. ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.

iX. முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

3) பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில், கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:


i. தொழில் நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ii. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.

iii. அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

iV. வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு
பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

V. டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

Vi. மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

Vii. மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

Viii. அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.


iX. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

X. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.


* பொது மக்கள் இ-பாஸ் அனுமதியில்லாமல், தனியார் போக்குவரத்துக்கு அரசினால் அனுமதிக்கப்பட்டாலும், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள், இந்நோய்த் தொற்றை தடுக்கும் வகையில்
அவர்களது பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் மீது, குறிப்பாக, வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் போன்ற வெளி நபர்கள் உள்ளே பிரவேசிக்க தேவையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு 2,500 ரூபாய் மதிப்பூதியம்:

பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணியில் தன்னலம் கருதாமல், அயராது களப்பணி ஆற்றிவரும் சுமார் 33,000 நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களின்  சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில்,  ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் சிறப்பினமாக 2,500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.

குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக தனிமை முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். அவ்வாறு முகாம்களில்தங்க வைக்கப்படும் போது, அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியில் மட்டும் அவர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பும்போது தலா 1,000 ரூபாய்  நிவாரணம் வழங்கப்படும்.