திங்கள், 18 மே, 2020

இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலையை தமிழர்கள் யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. இந்த துயர சம்பவத்தின் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2009ம் ஆண்டு மே மாதம் - இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த நேரத்தில் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றால் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது. உயிரைப் பிடித்துக் கொண்டு சாரை சாரையாக மக்கள் முள்ளிவாய்க்காலை நோக்கி படை எடுத்தனர். 
மே 16ம் தேதி நள்ளிரவில் விடுதலை புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பு கிடைக்கும் என நம்பிச் சென்ற தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்தது. கொத்து கொத்தாக மனிதர்கள் சுருண்டு விழுந்தனர். மனிதம் மாண்டதோ என கேள்வி எழும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் ரத்த ஆறு ஓடின. லட்சக்கணக்கான மக்கள் கேள்விகளின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். ரசாயன குண்டுகளுக்கும், வான்வழி தாக்குதல்களுக்கும் எண்ணற்ற மக்கள் இரையாகினர்.
கால் நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போரை மிகப்பெரும் இனப்படுகொலை மூலம் முடிவுக்கு கொண்டு வந்தது இலங்கை அரசு. மரண ஓலங்கள் எட்டுத்திக்கும் ஒலித்தாலும் உலக நாடுகள் மவுனித்தன. இறுதிப் போர் முடிவுற்று சில ஆண்டுகள் கழித்து, ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்தது குறித்த ஆதாரங்களை சேனல்-4 தொலைக்காட்சி சாட்சியங்களுடன் வெளியிட்டது. உள்நாட்டுப் போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் வெளியே கசிந்தபோது, உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. 
photo
இறுதிப் போர் குறித்து வெளியான செய்திகள் இலங்கை அரசுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்தது. பல்வேறு நாடுகள் ஐநாவில் போர் குற்றத்திற்கு காரணமானவர்களை தண்டிக்கக்கோரி வலியுறுத்தின. இலங்கையில் எந்த இனப்படுகொலையும் நடைபெறவில்லை என தொடர்ந்து மறுத்து வந்த இலங்கை அரசு, உலக நாடுகளின் கண்டனக் குழலுக்குப் பின்னர் ஐநாவின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறியது. இருப்பினும் இந்த விவகாரத்தில் இன்று வரை உரிய விசாரணை நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
வரலாற்றின் கருப்பு பக்கங்களில் இடம்பிடித்த முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு இன்று வரை உரிய நீதிக் கிடைக்கவில்லை என்பது பெரும் துயராகவே நீடிக்கிறது. ஆறாத ரணமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு கிடைக்கும் நியாயத் தீர்வு மட்டுமே ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் உயிர் பலிக்கு கிடைக்கும் நீதி.
credit ns7.tv