திங்கள், 18 மே, 2020

தென்மாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும் பெண்சிசுக்கொலை!

மதுரை மாவட்டம் சோழவந்தானில், 4-வதாக பிறந்த பெண் குழந்தையை எருக்கம்பால் கொடுத்து கொலை செய்த தந்தை மற்றும் பாட்டியை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தவமணி. இவருக்கும் மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா (26), விற்கும் ஏழு வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளது.  இந்நிலையில் கடந்த 10ம்தேதி மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனைவி சித்ராவுக்கு நான்காவதாக பெண் குழந்தை பிறந்தது. மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். நான்காம் நாள் சோழவந்தானில் உள்ள கணவரின் வீட்டிற்கு வந்தார். ஆனால் ஐந்தாம் நாள் காலையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல்  இறந்தது என கூறி அருகில் உள்ள பழைய காவலர் குடியிருப்பு பின்னாலுள்ள கருவேல  மரம் அருகே புதைத்தனர். 
இது குறித்து சோழவந்தான் கிராம நிர்வாக அலுவலர் சமையன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசு புதைத்த இடத்தை ஆய்வு செய்து சிசுவின் தந்தை தவமணியிடம் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும்  குழந்தைக்கு சளிபிடித்து, தொடர்ந்து வாந்தியெடுத்து உடல்நிலை சரியில்லாமல்தான் இறந்தது, என நாடகமாடினார். இந்நிலையில் 16ம்தேதி வாடிப்பட்டி வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், டி.எஸ்.பி ஆனந்த் ஆரோக்கியராஜ் முன்னிலையில் மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் சதாசிவம் மற்றும் மருத்துவ குழுவினர் சிசுவின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனர். பின் மயானத்திற்கு சென்று குழந்தையை நல்லடக்கம் செய்தனர். மேலும் தவமணி மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கையை கண்காணித்த  போலீசாருக்கு வலுத்த சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து தவமணியின் குடும்பத்தாரை போலீசார் துருவி துருவி விசாரித்தனர். நீண்ட நேர விசாரணையில் தவமணியும், அவரது தாய் பாண்டியம்மாளும் இணைந்து பெண் சிசுவை எருக்கம்பால் கொடுத்து கொலை செய்ததாக ஒப்பு கொண்டனர். 
அவர்கள் வாக்குமூலத்தில் :- 
சம்பவத்தன்று சிசுவின் தாய் சித்ரா மற்ற குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். மருமகள் சென்ற பின் சிசுவின் பாட்டி பாண்டியம்மாள் ஏற்கனவே தயாராக எடுத்து வைத்திருந்த எருக்கம்பாலை தனது மகன் தவமணியுடன் சேர்ந்து சிசுவின் வாயில் ஊற்றி மூச்சு திணற வைத்து கொன்றதாகவும், தொடர்ந்து சிசுவின் காலை பிடித்து தரையில் அடித்தோம் இதில் தலையில் காயம் பட்டது. பின்னர் அருகில் உள்ள பழைய காவலர் குடியிருப்பு பின்னால் உள்ள கருவேலம் மர புதருக்குள் குழி தோண்டி புதைத்தோம் என்றுவாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் (சிசுவின் தந்தை) தவமணி 35, அவரது தாய் பாண்டியம்மாள் 60 ஆகிய இருவரையும்  கைது செய்த போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர்.
1980 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்த கொலை செய்த சம்பவம், தென்மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கியிருப்பது, பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 
credit ns7.tv