தினமும் 74 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இது மிகப் பெரிய சாதனை என கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா சூழலை எதிர்கொள்வதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாவும், இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதும், கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏற்ப, 310 அரசு பரிசோதனை மையங்களும், 111 தனியார் பரிசோதனை மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவச உடை இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகள் இதுவரை 99 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அதே நேரத்தில் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாகக் கூறினார்.
credit ns7.tv