திங்கள், 4 மே, 2020

சென்னையில் கட்டுமானப் பணிகளைத் தொடரலாம் - சென்னை மாநகராட்சி

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் நாளை முதல் கட்டுமானப் பணிகளைத் தொடரலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம் எனவும், ஹார்டுவேர், கட்டுமானப் பொருட்கள், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள் இயங்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கணிப்பொறி, மொபைல் போன், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின் மோட்டார் பழுது நீக்கும் கடைகள், மூக்குக் கண்ணாடி விற்பனை நிலையங்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முடி திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை எனவும் மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். 
 
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில், முகக்கவசம், சமூக விலகலைப் பின்பற்றி நாளை முதல் கட்டுமான பணிகளை தொடரலாம் என தெரிவித்துள்ள மாநகராட்சி ஆணையர்,  கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு மாநகராட்சி ஆணையரின் ஆய்வுக்குப் பின்னர் அனுமதி அளிக்கப்படும் எனவும், அவற்றில் 25 சதவீத பணியாளர்கள் அல்லது 20 நபர்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்களுடனோ அல்லது 20 நபர்களைக் கொண்டு மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
credit ns7.tv