வங்கக் கடலில் நாளை ஆம்பன் புயல் (Cyclone Amphan) உருவாகும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக, மீனவர்கள், அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில், உருவான, காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. அது, இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக வலுவடைய கூடும்.
17ம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, 18ம் தேதி, வடகிழக்கு திசையில் நகரும். இந்த காலகட்டத்தில், சூறாவளி காற்று 75 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதிகபட்சமாக, 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்கு வங்க கடல் மற்றும் வங்கக் கடல் பகுதி, குமரிக்கடல், கச்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள், கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மாலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை புயலாக மாறினாலும், இது தமிழகத்தில் கரையை கடக்காது. ஏனெனில் இது, வடக்கு மற்றும் வட கிழக்கு திசையை நோக்கி பயணிக்கும். ஒடிசா அல்லது வங்கதேசத்தில் இது கரையை கடக்க கூடும். வங்க தேசத்தில் கரையை கடந்தால், அதனால் தமிழகத்திற்கு மழை இருக்காது. மாறாக, வெப்ப சலனம் காரணமாக வெயில் மேலும் அதிகரிக்கும். அதேநேரம், வட கிழக்காக செல்லாமல், வடக்கு நோக்கி நகர்ந்தால் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், அரபிக் கடலில் உள்ள காற்றின் ஈரப்பதத்தை இந்த புயல் இழுக்கும் காரணத்தால், கேரளா மற்றும் கர்நாடகாவில் கடலோரப் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதேபோல ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்தமானிலும் மழை பெய்யும்.
நாளை உருவாக உள்ள இந்த புயலுக்கு ஆம்பன் என பெயர் சூட்டப்படும். இந்த பெயர் ஏற்கனவே தாய்லாந்து நாடால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயலுக்கு தெற்காசிய நாடுகள் பெயர் சூட்டும் நடைமுறையின் ஒரு அம்சமாக தாய்லாந்து இந்த முறை புயலுக்கு பெயர் சூட்டுகிறது.