இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக உலக வங்கி 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,549) கோடி நிதி அறிவித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக உலக வங்கி ரூ. 7,549 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நகர்ப்புற ஏழைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக இந்த நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 400க்கும் மேற்பட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை தொழில்நுட்ப ரீதியில் ஒருங்கிணைப்பதற்கான நோக்கில் இந்த நிதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சரிசெய்ய ஆத்ம நிர்பார் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு நிதித் தொகுப்பை அறிவித்தார். பிரதமர் அறிவித்த இந்த நிதி தொகுப்பு முக்கியமானது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியா எடுக்கும் முடிவுகளுக்கு உலக வங்கி உறுதுணையாக இருக்கும் என்றும், சமூக திட்டங்களுக்காக மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லக் கூடாது என்ற நோக்கில் அரசுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் உலக வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியினை வழங்கவிருப்பதாக உலக வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv