சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுக்க மதிப்புக்கூட்டு வரியை உயர்த்துவதோடு குடிமக்களுக்கு வழங்கிவந்த மானியத்தையும் நிறுத்தவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பிய அமெரிக்க நாடுகளை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் ஈரான், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. மேலும் உலகம் முழுவதும் தொழில்துறைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளதால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விற்பனை வரலாறு காணத வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திப்புக்கூட்டு வரியை உயர்த்துவதோடு குடிமக்களுக்கு வழங்கி வரும் மானியத்தையும் நிறுத்த சவுதி அரேபிய அரசு முடிவெடுத்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள சவுதி அரேபிய நிதியமைச்சர் முகமது அல்ஜோடன், கொரோனா பரவலால் பொருளாதாரம் நலிவடைந்துள்ளதால் சவுதி அரேபியாவை கட்டமைக்க செயல்படுத்தப்பட்டு வரும் மிஷன் 2030 திட்டத்துக்கான நிதியை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொரோனாவால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு பெரும் நிதிப் பற்றாக்குறைக்கு வழி வகுத்துள்ளதால் ஜுலை 1 ஆம் தேதி முதல் பொருள்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை 5% முதல் 15% வரை உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் குடிமக்களுக்கு அரசு மூலமாக வழங்கப்பட்டு வரும் மானியமும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவித்த அவர், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி சலுகைகள நிறுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
credit ns7.tv