CREDIT NS7.TV
ஒரு மாதத்திற்கு மேலாக பாதிப்பு எதுவும் கண்டறியப்படாத நிலையில், நேற்று முதல்முறையாக வுஹானில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன நோய்த்தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
சீனாவின் வூஹானில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று ஏறக்குறைய இன்று உலக நாடுகள் அனைத்திலும் பரவி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளதுடன், பொருளாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 23ம் தேதியே வூஹானில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது, பின்னர் அது ஹூபே மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இதற்கு பலனளிக்கும் வகையில் அங்கு கொரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. மார்ச் மாதவாக்கிலேயே சீனாவில் ஊரடங்கு தளர்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது இயல்பு வாழ்க்கை அங்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில் கொரோனாவின் பிறப்பிடமாக கூறப்படும் வுஹான் நகரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படாமல் இருந்து வந்தநிலையில் நேற்று அங்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சீனாவில் கடந்த 10 நாட்களில் இல்லாத வகையில் இரண்டு இலக்க பாதிப்பு நேற்று உறுதியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு சீனாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது.
இதுவரை சீனாவில் 82,901 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,633 பேர் உயிரிழந்துள்ளனர்.