கால நிலைமாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வெள்ளம், புயல் மற்றும் வறட்சி உருவாக கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நவீன வளர்ச்சி மனித குலத்தை பல அதிசய சாதனைகளை செய்ய துணையாக இருந்துள்ளதை யாரும் மறுக்கவியலாது. அதன் காரணமாகவே, இன்றளவும் மனிதன், உலகில் உள்ள மற்ற உயிரினங்களை கட்டுப்படுத்தி, இந்த உலகையே ஆட்சி செய்ய முடிகிறது. மனிதனின் இந்த ஆதிக்க செயல்பாடுகள், இயற்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, ராட்சத தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்ட நவீன கூறுகளாலும், அதிலிருந்து வெளிப்படும் மாசுகளாலும், கால நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, உலகம் வெப்பமயமாகி கொண்டிருப்பதை தொடர்ச்சியாக பதிவு செய்துள்ளனர் ஆய்வாளர்கள்.
இந்நிலையில், காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் நினோ போன்ற அசாதரணமான சூழல் உருவாகும் என கால நிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது உலகம் முழுவதும் வெள்ளம், புயல் மற்றும் வறட்சி போன்ற தீவிரமான காலச்சூழலை உருவாக்கும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
எல் நினோ நிகழ்வு என்றால் என்ன?
கடல் மற்றும் வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் வெப்பம், காற்றின் மாறுதல்கள் மற்றும் அதனால் எற்படும் விளைவுகளால் உலக நாடுகளில் உள்ள சில பகுதிகளில் பருவநிலைகளில் பாதிப்புக்களை உண்டாக்கும். இதைத்தான் கால நிலை ஆராய்ச்சியாளர்கள் எல் நினோ என கூறுகின்றனர். குறிப்பாக, புவி வெப்பமயமாதலின் காரணமாகப் புவியின் கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலில் ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவது எல் நினோ விளைவு. சரி இதனால், நமக்கு என்ன பாதிப்பு ஏற்படும் கூடும் என அனைவரும் கேள்வி எழுப்பலாம். எல் நினோ காரணமாக, உலகின் பல இடங்களில் பெரு மழை, வெள்ளம், கடும் வறட்சி உள்ளிட்ட பேரழிவுகள் நிகழும். இந்தியப் பெருங்கடலில் தோன்றும் எல் நினோ, பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு ஒன்று, ஆய்வு மேற்கொண்டது. இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் காலநிலை மாற்றம் எவ்வாறு இருக்கும் என்பதைக் காட்டும் மாதிரிகளை அந்த ஆய்வு குழு உருவாக்கியது. அவர்களின் கண்டுபிடிப்புகளின் படி, இந்தியப் பெருங்கடல் இன்றைய காலநிலையை விட மிகவும் வலுவான காலநிலை மாற்றங்களை உண்டாக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும், இந்திய பெருங்கடலில் ஏற்படும் இந்த கால நிலை மாற்றத்தை அவர்கள் மதிப்பிட்டதில் 2100ம் ஆண்டளவில் மக்களை பாதிக்கக்கூடும் என்பதை எச்சரிக்கை செய்யும் வகையில் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உலகம் முழுவதும் இதே போன்ற வெப்பமயமாதல் போக்குகள் தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டிலேயே கூட இந்த பேரழிவுகள் உலகை தாக்கலாம் எனவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.
அந்த ஆய்வின் முடிவில் ஆய்வாளர்கள் கண்டறிந்த செய்தி என்னவென்றால், மனிதர்கள் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளின் அளவை இதற்கு மேலும் குறைக்காவிட்டால், எந்த நவீன வளர்ச்சியால் மனித குலம் எழுச்சி பெற்றதோ அதே, நவீன வளர்ச்சியால், மனித குலம் அழிவை சந்திக்கும் என தெரிவிக்கிறது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் மாற்றங்களால், அதனை சுற்றியுள்ள நாடுகளான இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு ஆபிரிக்கா போன்ற நாடுகளில் தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகரிக்கும் தீவிரத்துடன் இருக்கும். ஏற்கனவே, கொரோனா வைரஸ் எனும் பேரழிவில் இருந்து மீள மனித குலம் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து வரும் கால நிலை மாற்றம் எனும் பேராபத்தை கண்டுகொள்ளாமல் விடுவது, நமது அழிவுக்கு நாமே குழி தோண்டுவது போல் அமையும் என்பது மட்டும் நிச்சயம்.