பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 1 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 1- மொழிப்பாடம்,
ஜூன் 3- ஆங்கிலம்,
ஜூன் 5- கணிதம்,
ஜூன் 6- விருப்ப மொழிப் பாடம்,
ஜூன் 8- அறிவியல்,
ஜூன் 10- சமூக அறிவியல்,
ஜூன் 12- தொழிற்பாடம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 லட்சத்து 45,006 பேர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவிருக்கின்றனர். அதில் 4,74,844 பேர் மாணவர்கள், 4,70,155 பேர் மாணவிகள் மற்றும் 7 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைவாசிகள் 144 பேரும் 10ம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கின்றனர்.
அதே போல் மார்ச் 26ல் நடைபெறவிருந்த 11ம் வகுப்பு கடைசி தேர்வு ஜூன் 2ம் தேதி நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மார்ச் 24ம் தேதி 12ம்வகுப்பு தேர்வை எழுதாத மாணவர்கள் ஜூன் 4ம் தேதி அந்த தேர்வை எழுதலாம் என கூறியுள்ளார்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சுகாதார வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் எனவும், மாணவர் சமூக இடைவெளியுடனே தேர்வு அறையில் அமர வைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி முக்கியம் என்பதால் தேர்வு நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடன் தெரிவித்தார்.