credit ns7.tv
இனிவரும் காலங்களில் தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளாளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு தெரிவித்தன. அந்தவகையில், பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் தனது ஊழியர்களை கடந்த மார்ச் 11ம் தேதி முதல் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு உத்தரவிட்டது.இந்நிலையில் உலகளவில் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ட்விட்டர் நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இனிவரும் காலங்களில் ட்விட்டர் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே தெரிவித்துள்ளார். நிர்வாகத்தின் இந்த முடிவை ட்விட்டர் செய்திதொடர்பாளர் உறுதி செய்துள்ளார். வீட்டில் இருந்தே பணியாற்ற விரும்பும் ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், அலுவலகம் வர நினைப்பவர்கள் குறைந்தபட்சம் செப்டம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அலுவலகத்தை மீண்டும் திறக்க முடிவெடுத்தால், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஊழியர்கள் வீட்டில் இருந்தே சிறப்பாக பணி செய்வதாகவும், இனிவரும் காலங்களிலும் அவர்களால் வீட்டில் இருந்தே திறம்பட பணியாற்ற முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே, ட்விட்டர் ஊழியர்களின் தொழில் சார்ந்த பயணங்கள் 2021ம் ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் ட்விட்டர் நிர்வாகத்தின் இந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.