சனி, 16 மே, 2020

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமுக்குள் பரவிய கொரோனா!


Image
வங்கதேச அகதிகள் முகாமில் உள்ள ரோஹிங்யா, அகதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு அரசுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
மியான்மரில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சனைக் காரணமாக அங்கு வாழ்ந்த சிறுபான்மையின மக்களான ரோஹிங்யா முஸ்லீம்கள்  நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். இதனால் லட்சக்கணக்கான அகதிகள் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். 
இதில் ஏற்கனவே இந்தியா அகதிகளை ஏற்க மறுத்தால் ரோஹிங்யாக்கள் அனைவரும் வங்கதேசத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் வங்கதேசம் தற்காலிக அகதிகள் முகாம்கள் அமைத்துள்ளது. இங்கு சுமார் 10 லட்சத்துக்கும் அதிமான அகதிகள் உள்ளனர். 
இது உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமாகவும் இது கருதப்படுகிறது. இதனிடையே தற்போது பரவி வரும் கொரோனாவாலும் போதிய இடப்பற்றாக்குறை காரணமாகவும் சமீபகாலமாக நாட்டிற்குள் நுழைய முயலும் அகதிகளை வங்கதேசம் திரும்பி அனுப்பி வருகிறது. மேலும் அகதிகள் முகாம்களிலும் கொரோனா பாதிப்பு பரவாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு மில்லியன் அகதிகள் உள்ள காக்ஸ் பஜார் முகாமில் 2 அகதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
உள்நாட்டு மக்களுக்கு பரவிவரும் கொரோனா தொற்றை தடுக்கவே அரசு போராடி வரும் நிலையில் தற்போது அகதிகள் முகாம்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சம்பவம் வங்கதேச அரசுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு மருத்துவர், உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் உள்ள இரண்டு அகதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு 10 லட்சம் அகதிகள் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். இதுவரை 1900 அகதிகள் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் தொற்று தீவிரமடையும் பட்சத்தில் 1000க்கும் அதிகமானோர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் முகாம் முழுவதும் வைரஸ் பரவினால் கட்டுப்படுத்துவது கடினம் எனவும் இருப்பினும் நிலைமையை கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 
வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் சுகாதாரப் பிரச்சனைகள் அதிகம் காணப்படுவதோடு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 40,000 முதல் 70,000 அகதிகள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv