ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியாவில் கொரோனா வைரஸ் தொற்று முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு இத்தாலி தொடங்கி கிரீஸ் வரை உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியது. இதனால் அங்கு ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் அந்நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள ஸ்லோவேனியா நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு முழுவதும் கட்டுப்படுத்தப்படுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஸ்லோவேனியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த அண்டை நாடுகளான இத்தாலி, ஹங்கேரியின் எல்லைகளை மூடியதோடு ஊரடங்கு நடைமுறைகளையும் அமல்படுத்தியது. இதனை அடித்து அங்கு மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. இதுவரை அங்கு 1,467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 103 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் அங்கு கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோய் பாதிப்பு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து ஊரடங்கு நடவடிக்கைகள் தளர்த்தப்படும் எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பொது இடங்களில் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டு, சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் வாரத் தொடக்கத்தில் சில வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் திறக்க அனுமதிக்கப்படும் எனவும் வரும் 23 ஆம் தேதி முதல் கால்பந்து போட்டிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நிபுணர்கள், கொரோனா நாட்டை விட்டுச்சென்று விட்டதாக எண்ணிவிடக்கூடாது எனவும் அது மீண்டும் தீவிரமெடுக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஐரோப்பாவில் கொரோனாவில் இருந்து மீண்ட முதல் நாடு என்ற பெயரை ஸ்லோவேனியா பெற்றுள்ளது.
credit ns7.tv