ஞாயிறு, 10 மே, 2020

தப்லிக் ஜமாத் தலைவர் பேசியதாக கூறப்படும் ஆடியோ போலி- டெல்லி போலிஸ்

பல்வேறு இடங்களில் மத நம்பிக்கை மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து மவுலானா சாத் கந்தால்வி பேசிய ஆடியோ கிளிப்கள் ஒன்றாக திருத்தப்பட்டிருக்கலாம் என்று..

சமூக விலகல் நெறிமுறைகளையும், ஊரடங்கு உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டாம் என்று மார்க்கஸ் நிஜாமுதீன் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி கேட்டுக் கொண்டதாகக் கூறப்படும்  ஆடியோ கிளிப் “போலியானது” (பல ஆடியோ கிளிப்புகளை ஒன்றாக திருத்தப்பட்டிருக்கலாம் )” என்று டெல்லி குற்றவியல் பிரிவு நடத்தி வந்த முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மவுலானா சாத் கந்தால்விக்கு  எதிரான முதல் தகவல் அறிக்கையில்  இந்த ஆடியோ கிளிப் பற்றிய குறிப்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி 2,000க்கும் அதிகமான மக்களை ஒன்று திரட்டியதால், தப்லிகி ஜமாத்தின் ஆலாமி மார்க்கஸ் மஸ்ஜித் நிர்வாகக் குழுவுடன் தொடர்புடைய மவுலானா சாத் கந்தால்வி உட்பட 6 பேர் மீது டெல்லி காவல்துறை  ஐபிசி 304- ன்  (கொலைக் குற்றம் ஆகாத, மரணத்தை விளைவிக்கும் செயல்)கீழ் வழக்குப் பதிவு செய்தது.
ஹஸ்ரத் நிஜாமுதீன் காவல் நிலைய அலுவலர் முகேஷ் வாலியா அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.  ஆடியோ கிளிப்களை வெளியிட்டதாக கூறப்படும் மார்க்கஸ் உறுப்பினர் ஒருவரின் மடிக்கணினி போலீசார் கைப்பற்றி விசாரித்ததாக உயர்மட்ட வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன. அந்த மடிக்கணினியில் 350 க்கும் மேற்பட்ட ஆடியோ கிளிப்புகள் மூன்று தன்மையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மார்கஸ் மாநாட்டின் போது பதிவு செய்யப்பட்ட ஒரிஜினல் ஆடியோ ; உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட ஆடியோ; தங்கள் யூடியூப்  சேனலில் பதிவேற்றப்பட்ட ஆடியோ  என மூன்று தன்மைகளில் இருந்ததாக வட்டாரங்கள்  தெரிவிக்கின்றது.
இருப்பினும், இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான விசாரணை குழுவுக்கு, சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய (எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்ட) அந்த குறிப்பிட்ட ஆடியோ இதுவரை கிடைக்கவில்லை. மாறாக, பல்வேறு இடங்களில் மத நம்பிக்கை மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து மவுலானா சாத் பேசிய ஆடியோ கிளிப்கள் ஒன்றாக திருத்தப்பட்டிருக்கலாம் என்று  விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள,” நீங்கள் சமூக விலகலை பின்பற்ற தேவையில்லை, ஏனெனில், அது நமது மதத்தில் எழுதப்படவில்லை”என்ற அந்த ஆடியோ கிளிப், உண்மையில், பல ஆடியோ கிளிப்களின் கலவை (கிட்டதட்ட 20) என்பதை விசாரணைக் குழு கண்டறிந்தது. சித்தரிக்கப்பட்ட ஆடியோ கிளிப் உட்பட அனைத்து கிளிப்புகளையும், தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் பிரவீர் ரஞ்சன் கூறுகையில், “சமூக ஊடகங்களில் வைரலாகி வரும்  ஆடியோ கிளிப் ஒன்றை தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பியுள்ளோம். அரசு வழிகாட்டுதல்கள் பொருட்படுத்தாமல், இந்த நிகழ்வை முன்னெடுத்து சென்றார்கள் என்பதற்கான ஆதாரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம்.” என்று தெரிவித்திருந்தார்.
நேற்று, பிரவீர் ரஞ்சன்  தொலைப்பேசி அழைப்புகளை எடுக்கவில்லை அல்லது செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை.