ஞாயிறு, 10 மே, 2020

அமித் ஷா குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் - திரிணாமுல் காங்கிரஸ்

இத்தனை நாட்கள் மௌனமாக இருந்துவிட்டு தன் கடமைகளில் இருந்து தவறிய அமித் ஷா மேற்கு வங்க அரசின் மீது குற்றம் சுமத்துவதா என்றும் கேள்வி

TMC asks Amit shah to prove allegations or apologize, : மே மூன்றாம் தேதிக்கு பிறகு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரையும் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அழைத்துவர பெரும் முயற்சி செய்து வருகிறது மத்திய அரசு. அவர்களுக்கான கட்டணத்தை காங்கிரஸ் கட்சியை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து மட்டும் புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வர போதுமான உதவிகளை மாநில அரசு செய்ய முன்வர வில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறது மத்திய அரசு. ஆனால் மேற்கு வங்க அரசு மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்து வருகிறது. இதனால் மேற்குவங்க தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் ரயில்களை மேற்கு வங்க எல்லைக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது மேற்கு வங்க அரசு என்றும் மேற்கு வங்கத்தில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெரும் அநீதியை திரிணாமூல் காங்கிரஸ் அரசு இழைக்கிறது என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் தரும் வகையில் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு கருத்தை பதிவிட்டிருக்கிறார். கொரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில், பல வாரங்கள் கழித்து இன்றுதான் உள்துறை அமைச்சர் பேசி இருக்கிறார். இத்தனை நாட்கள் மௌனமாக இருந்துவிட்டு தன் கடமைகளில் இருந்து தவறிய அமித் ஷா மேற்கு வங்க அரசின் மீது குற்றம் சுமத்துவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது சொந்த அரசால் கைவிடப்பட்ட புலம்பெயர் மக்களை பற்றி அமித்ஷா பேசுவது முரண்பாடாக அமைந்துள்ளது. மேற்கு வங்க அரசின் மீது வைத்திருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் இல்லை என்றால் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.