ஐக்கிய அரபு அமிரகத்தின், சார்ஜாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் காயமடைந்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வானுயர்ந்த அடுக்குமாடி கட்டிடங்களை அதிகம் கொண்ட நகரங்களில் ஷார்ஜாவும் ஒன்று. இங்குள்ள அல் நகாடா பகுதியில் அபேகோ டவர் என்ற 47 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் 300க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அங்குள்ள குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவிய தீ, கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், குடியிருப்பில் சிக்கியிருந்த 300 குடும்பங்களையும் பத்திரமாக வெளியேற்றினர். மேலும் இரண்டு மணி நேர போரட்டத்துக்குப் பின்னர் தீயை, தீயணைப்பு படையினர் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் 7 பேர் சிறிய அளவிலான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்பதால் ஷார்ஜா காவல்துறையினர் இது தொடர்பான விசாரணையில் இறங்கியுள்ளனர். இதனிடையே போதிய பாதுகாப்பு வசதிகளுடன் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என கட்டிடக்கலை வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
credit ns7.tv