ஞாயிறு, 17 மே, 2020

ஊரடங்கும், குடும்ப வன்முறை அதிகரிப்பும் : இந்த இன்னல்களை எதிர்கொள்வது எப்படி?

குடும்ப வன்முறைகளில், உளவியல், உடலளவில், பாலியல், பொருளாதார மற்றும் உணர்வுப்பூர்வமான சுரண்டல் இருக்கும். தாக்குதல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மற்றும் மிரட்டல் போன்றவை குடும்ப வன்முறைகளாக கருதப்படுகிறது.

அவிவா பர்வேஸ் டமானியா, கட்டுரையாளர்.
சிலருக்கு வீடு என்பது பாதுகாப்பான இடமாக இருந்தாலும், அனைவருக்கும் அது பாதுகாப்பான இடமாக இல்லாததாகிவிடுகிறது. உண்மையில், கோவிட் – 19 ஊரடங்கால் குடும்ப வன்முறை வழக்குகள் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் புதிய அளவில் வன்முறைக்கு ஆளாகக்கூடிய ஆபத்திலும் சிக்கித்தவிக்கின்றனர். இந்தியாவில், பெண்களுக்கான தேசிய கமிஷன், தேசிய ஊரடங்கு துவங்கிய நாள் முதல், குடும்ப வன்முறை வழக்குகள் அதிகரித்து வருவதாக கூறுகிறது. குடும்ப வன்முறைகளில், உளவியல், உடலளவில், பாலியல், பொருளாதார மற்றும் உணர்வுப்பூர்வமான சுரண்டல் இருக்கும். தாக்குதல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மற்றும் மிரட்டல் போன்றவை குடும்ப வன்முறைகளாக கருதப்படுகிறது.
குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன ஆரோக்கிய குறைபாடுகள் இருக்கும்?
மனித உரிமை மீறல் காரணமாக, குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பல உடல் மற்றும் மன ரீதியிலான ஆரோக்கிய கோளாறுகளை சந்திக்க நேரிடும். இதனால், நாள்பட்ட நோய்கள், மன அழுத்தம், பாலியல் கோளாறுகள், மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற ஊரடங்கு நேரங்களில், சமூகத்தின் ஆதரவு கிடைக்காமல் இருப்பதும் குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதற்கான காரணமாகும். இதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு சில வழிகளே உள்ளன. வழக்கமாக இதுபோன்ற வன்முறைகளில் மாட்டிக்கொண்டவர்கள் தப்பியோடவே முயற்சிப்பார்கள். ஆனால், இந்த ஊரடங்கில் அதுவே சாத்தியமில்லாததாகிவிடுகிறது.
இந்த ஊரடங்கு, குடும்ப வன்முறையால், குழந்தைகளை அதிகளவில் பாதிப்பிற்குள்ளாக்கியிருக்கிறதா?
ஊரடங்கு என்ற சொல்லே எங்கோ மாட்டிக்கொண்டதைப்போன்ற ஒரு பொருளையும், உணர்வையும் தருகிறது. இதனுடன் மன அழுத்தமும் சேர்ந்துகொண்டால், அதிகளவில் வன்முறையை, பாதிக்கப்பட்டவர் மீது ஏவ வழிவகுக்கின்றன. இதுபோன்ற நேரங்களில் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளது. அதிகமான மன அழுத்தம், பயம், வேலையில்லாமல் போய்விடுமோ என்ற அச்சம், பொருளாதார பிரச்னைகள் போன்ற பல்வேறு பிரச்னைகள், பெற்றோரை குழந்தைகள் மீது வன்முறையை ஏவ காரணமாக அமைந்துவிடுகிறது.
தாக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட நபர் என்ன செய்யவேண்டும்?
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நடந்தவற்றிற்கு தங்களை காரணமாக்கிக்கொள்ளக்கூடாது. வன்முறை எதற்கும் தீர்வல்ல. அது எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே குற்றவாளிதான் 100 சதவீதம் பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு யாரும் இல்லை என்பதற்காக பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகளை விட்டுவிடக்கூடாது. அப்படி ஏற்றுக்கொள்ளும்போது, பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்ச சுரண்டலுக்கு ஆளாக நேரிடும்.
குடும்ப வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து போலீசாரிடம் புகார் கொடுக்கும் வசதி எப்போதும் உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் போலீஸ் புகார் கொடுக்க விரும்பவில்லையெனில், அவரின் பாதுகாப்பிற்கான திட்டத்தை அவரே ஏற்படுத்திக்கொள்ளலாம். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் இதுபோன்ற வன்முறை நடக்கும்போது அவர்களை காப்பாற்றுவதற்கு உதவும்படி கேட்கலாம்.
நண்பர்களோ, குடும்ப உறுப்பினர்களோ அல்லது பக்கத்து வீட்டுக்காரரோ அல்லது யாரேனும், பிரச்னை ஏற்படும் நேரத்தில் அழைத்தால் வரும் தூரத்தில் இருக்குமளவு, நம்பிக்கையானவர்களை உதவிக்கு அழைக்கலாம். இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்தால், அதுகுறித்து, நம்பிக்கையான குடும்ப உறுப்பினர்கள்மற்றும் நண்பர்களிடம் கலந்தாலோசிக்கலாம். குற்றவாளியையும் அதற்கு பொறுப்பேற்க வைக்கலாம். குடும்ப வன்முறைக்கு, பல்வேறு உதவி எண்கள் உள்ளன. அவற்றை தொடர்புகொள்ளலாம் அல்லது பல்வேறு இணையதள ஆலோசனை வசதிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மன அமைதி பெறலாம்.
கோபத்தை கட்டுபடுத்த முடியாத, முரட்டுத்தனமான குணமுள்ளவர்கள் தங்களின் மன அழுத்தத்தை முடிந்த அளவு குறைக்க முயற்சி செய்யுங்கள். சுய பராமரிப்பை கடைபிடித்து, ஊடகங்களில் நேரம் செலவிடுவதை தவிர்த்து, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பயிற்சிகளை எடுத்துக்கொள்வது மற்றும் ஆலோசகர்களின் உதவியை நாடுவது போன்றவை அவர்களுக்கு நல்வழி காட்டும். பெற்றோர்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், அவர்கள் கட்டுப்பாடில்லாமல் இருப்பது குழந்தைகளை பாதிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
உதவ முடியாதவர்களை இந்த நேரத்தில் பாதுகாப்பது என்பது மிகக்கடினமான ஒன்று. நீங்களும் உங்களைச்சுற்றி ஏதேனும் குடும்ப வன்முறைகள் நடக்கிறதா என்பதை உற்றுநோக்குங்கள். அங்கு உதவிக்கு செல்லுங்கள் அல்லது உதவுபவர்களை அங்கு அனுப்பி வையுங்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் தலையிடும்போது மிகமிக கவவனமாக இருக்கவேண்டும். எல்லோருக்கும் கடுமையான காலமாக இது உள்ளது. நாம் அனைவரும் கரம் கோர்த்தால்தான், நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதில் நாம் வெற்றிபெற முடியும்.
இக்கட்டுரையை எழுதியவர் லண்டனை சேர்ந்த உளவியல் நிபுணர்.

தமிழில்: R. பிரியதர்சினி.
credit indianexpress.com