செவ்வாய், 12 மே, 2020

ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன?

பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
மத்திய உள்துறை அமைச்சகமும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி, தொழிற்சாலைகள் இயக்கப்படும் முதல் வாரத்தை சோதனைக் காலமாகக் கருதி, பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்துகொள்ள வேண்டும். முதல்வராத்தில் அதிக உற்பத்தி இலக்கை நிர்ணயிக்கக் கூடாது. இயந்திரங்களை இயக்கத் தொடங்கும்போது வித்தியாசமான சத்தமோ அல்லது வித்தியாசமான வாசனையோ இருந்தால் அந்த இயந்திரம் சரி செய்யப்பட வேண்டும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, தேவை எனில், இயந்திரத்தை நிறுத்திவிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 
ஊரடங்கு அமலில் உள்ள காலகட்டத்தில், இயந்திரங்களின் இயக்கம் முறையாக தொடங்கப்படுவதையும், முறையாக நிறுத்தப்படுவதையும் நிறுவனங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மத்திய அரசு, தொழிற்சாலைகளின் இயக்கம் தொடங்கும் முன்பாக பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. தொழிற்சாலைகளை இயக்குவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் அதிகம் இருப்பதாகத் தெரிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் உதவியை கோர வேண்டும் என்றும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சேமிக்கும் கிடங்குகளில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.