மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 3 வாரங்களாக அங்கு கொவிட் 19 நோயுடன் தொடர்புள்ள உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
இத்தகவலை மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8,668 ஆகும். இவர்களில் இதுவரை 8,476 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 121ஆக நீடிக்கிறது.
"தற்போது 71 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இரண்டு நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.
"கடந்த 22 நாட்களாக கோவிட்19 நோய்த்தாக்கம் உள்ள எவரும் உயிரிழக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்றை மலேசியாவும் வெற்றிகரமாக சமாளித்துள்ளது," என்று நிர்வாகத் தலைநகரான புத்ரா ஜெயாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் அகன்றுவிட்டதாகக் கருதப்பட்ட நாடுகளில் அதன் தாக்கம் மீண்டும் ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய நிலை மலேசியாவில் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமானால், அரசாங்கம் அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மிக அவசியம் என்றார்.
மலேசியாவில் அண்மைய சில தினங்களாக புதிய கொவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே பதிவாகி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 97.8 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.
வெளிநாடுகளில் தவிக்கும் 4.57 லட்சம் மலேசியர்கள்
உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் சுமார் 4.57 லட்சம் மலேசியர்கள் தவித்து வருவதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 3,87,702 பேர் தாங்கள் தற்போதுள்ள நாடுகளில் இயங்கி வரும் மலேசிய தூதரகங்களில் தாயகம் திரும்புவதற்காக தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர் என்றும், மீதமுள்ளவர்களைத் தொடர்புகொண்டு தகவல்கள் பெற தூதரகங்கள் முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் விவகாரத்தை வெற்றிகரமாக எதிர்கொண்ட நாடுகளில் ஒன்றாக மலேசியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மொகிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த மலேசிய சமூகத்தின் ஒத்துழைப்புடன் இதைச் சாதிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மலேசியாவில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், இது மிகவும் சவாலான காலகட்டம் என கூறியுள்ளார்.
"இதையடுத்து நாம் மேலும் ஒரு கட்டத்தைக் கடந்துவர வேண்டியுள்ளது. கொவிட் 19 நோய்க்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் நாம் முன்னோக்கிச் செல்லவேண்டி உள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளையும் விட நாம் வேகமாக முன் செல்ல வேண்டியிருக்கும்," என்று பிரதமர் மொகிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.