டெங்குவுக்கு 50 ஆண்டுகளாக தடுப்பு மருந்து கண்டறிய போராடிகொண்டிருக்கும் வேளையில், கொரோனா தொற்றுக்கு உடனே மருந்து வந்துவிடும் என நாம் எண்ணுவது நம் எதிர்பார்ப்பை காட்டுகிறது என்கிறார் ஒய்வு பெற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானி மாரியப்பன்.
தடுப்பு மருந்து கண்டறிய காலக்கெடு நிர்ணயம் செய்வது சிரமமான காரியம் என்றும் ஒரு தடுப்பு மருந்து உருவாக நான்கு நிலைகளில் பல்வேறு மக்கள் திரளிடம் அந்த மருந்தை சோதனை செய்து பார்க்கவேண்டும் என்பது ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலில் உள்ளது என்கிறார் முன்னாள் ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானி மாரியப்பன்.
ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமான பாரத் பையோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் இணைந்து, கொரோனாவுக்கான தடுப்பு மருந்துக்கான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை மூலம்,கோவாக்ஸின் என்ற மருந்து ஆகஸ்ட்15ம் தேதி வெளியாகும் என ஐ.சி.எம்.ஆர். சமீபத்தில் கூறியிருந்ததது.
கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி உள்ளிட்ட இந்தியா தடுப்பூசிகளுடன் சேர்த்து உலகளவில் 140 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், 11 தடுப்பூசிகள் மனிதப் பரிசோதனைகளில் உட்படுத்தப்பட்டுள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தடுப்பு மருந்து வெளியாகும் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்திருப்பது ஒரு நெருக்கடி நிலையை ஏற்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், முன்னாள் ஐ.சி.எம்.ஆர்.விஞ்ஞானி மாரியப்பனிடம், ஒவ்வொரு தடுப்பு மருந்தும் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாக என்ன விதத்தில் சோதனை செய்யப்படும் என கேட்டோம்.
இந்தியாவில் எல்லா தடுப்பு மருந்துகளும் விரிவான நான்கு முக்கிய படிநிலைகளில் பரிசோதிக்கப்படும் என்றார் அவர்.
''தடுப்பு மருந்து சோதனையில், முதலில் விலங்குகளுக்கு மருந்தை செலுத்தி சோதனை செய்வார்கள். ஆய்வுக்காக சோதனை செய்வதற்கு எலிகள் அல்லது குரங்கு போன்ற விலங்கை தேர்வு செய்வார்கள். மனிதன் பாலூட்டி வகையை சேர்ந்தவன் என்பதால், பாலூட்டி இனத்தைச் சேர்ந்த விலங்கு தேர்வு செய்யப்படுகிறது. எந்த விலங்களை தேர்வு செய்வது, எத்தனை விலங்குகளை சோதனை செய்யலாம் என்பது ஒவ்வொரு ஆய்வுக்கும் வேறுபடும்,'' என்றார்.
விலங்கு மீதான சோதனை செய்ததில், தடுப்பு மருந்து வெற்றிகரமாக செயலாற்றுகிறது என்பது உறுதியானால், மனிதர்கள் மீது நான்கு நிலைகளில் சோதனை செய்வார்கள் என்கிறார் மாரியப்பன். ''எல்லா படிநிலைகளில், சோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களிடம் முழுமையாக தகவல்களை எடுத்துரைத்து, அவர்களின் ஒப்புதலை பெற்ற பின்னர்தான் சோதனை செய்யவேண்டும்,''என்கிறார் அவர்.
பின்னர் மனிதர்கள் மீது நடத்தப்படும் நான்கு நிலையான பரிசோதனைகள் குறித்து விவரித்தார்.
முதல் படிநிலை
ஆய்வுக்காக தேர்வான நபர்கள் இரண்டு பிரிவாக இருப்பார்கள். அவர்களில் ஒரு பிரிவு, நோய் பாதிக்கப்பட்டவர்கள் மற்றொரு பிரிவு ஆரோக்கியமானவர்கள். முதல் முறை சோதனை என்பதால், குறைவான நபர்களை கொண்டுதான் சோதனை செய்யப்படும். இரண்டு பிரிவிலும் சமமான எண்ணிக்கையில் நபர்கள் இருப்பார்கள்.
விலங்கு மீது செலுத்தப்பட்ட மருந்தின் அளவை விட ஒரு சிறு பங்கு (dose) மருந்தை அதிகரித்து சில நபர்களுக்கு தடுப்பு மருந்து கொடுப்பார்கள், சில நபர்களுக்கு உண்மையான மருந்து இல்லாமல், மருந்தின் தன்மையற்ற ஒன்றை (பிளாசிபோ) கொடுப்பார்கள். மருந்து செலுத்தப்பட்ட நபர்களின் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்களை நுட்பமாக பதிவு செய்வார்கள். ஒவ்வொரு நிலையிலும், ஆய்வில் பங்கேற்றவர்களின் உடல்நிலையில், குறிப்பாக இருதயம், மத்திய நரம்பு மண்டலம் மற்றும் நுரையீரல் அமைப்பு, ரத்தம், இனப்பெருக்க மண்டலம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக பதிவு செய்யவேண்டும்.
இரண்டாம் படிநிலை
முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றால், இரண்டாம் நிலை சோதனைக்கு அனுமதி வழங்கப்படும். இதில், சோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை முதல் நிலையில் இருந்ததைவிட, அதிகமாக இருக்கும். அதேபோல, சோதனையில் ஈடுபடுத்தப்படும் நபர்களில், ஆண்கள், பெண்கள், இளவயதினர், குழந்தைகள் என பலதரப்பட்ட வயதை சேர்ந்தவர்கள் சோதிக்கப்படுவார்கள். முதல் நிலையில் செலுத்தப்பட்டதைவிட,இரண்டாம் நிலையில் அதிகளவு மருந்து செலுத்தப்படும்.
இரண்டாம் கட்ட சோதனை மிகவும் முக்கியமானது. மருந்து செலுத்தப்பட்ட நபர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் குறைவுகளை கவனமாக பார்க்கவேண்டும். தடுப்பு மருந்து ஏதாவது பாதகமான விளைவை ஏற்படுத்துகிறதா என பார்க்கவேண்டும். இரண்டாம் நிலையை கொண்டு அந்த ஆய்வை தொடர்ந்து நடத்தலாமா என ஆய்வாளர்கள் முடிவு செய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில நேரங்களில், சோதனை செய்யப்படும் குழுக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் போது, ஒரே நேரத்தில் இரண்டாம் மற்றும் முன்றாம் நிலை சோதனைகள் வேறு வேறு குழுக்களில் நடத்தப்படுவதும் உண்டு. ஆனால், எல்லா குழுக்களும் எல்லா படிநிலைகளை கடந்து செல்வது அவசியம்.
மூன்றாவது படிநிலை
சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்களை மூன்றாவது நிலையில் சோதிக்கலாம். இந்த நபர்கள் விதவிதமான வாழ்விடங்களில் இருந்து தேர்வு செய்யப்படவேண்டும் . தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் போன்ற அம்சங்களை இந்த நிலையில் சோதிப்பார்கள். அதேபோல தடுப்பு மருந்து காரணமாக ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என தீர்க்கமாக சோதிப்பார்கள். இந்த படிநிலை, மற்ற எல்லா படிநிலைகளைவிட அதிக காலத்தை எடுத்துக்கொள்ளும்.
அதேநேரம், அதிக எண்ணிக்கையிலான நபர்கள் சோதிக்கப்படுவார்கள்.ஒரு மருந்து, நகர் பகுதி, கிராம பகுதி, கடலோர பகுதி, மலைப்பகுதி என விதவிதமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் சோதனை செய்யப்படும். ஒரு சில ஆய்வுகளில் மூன்றாம் நிலை சோதனையில், பல்வேறு நாடுகளில் உள்ள மக்களுக்கு மருந்து செலுத்தப்பட்டு சோதனை செய்யப்படும்.
எடுத்துக்காட்டாக, டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை பல்வேறு மருந்துகளை சோதனை செய்துவருகிறார்கள். கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தில் நான்கு விதமான வைரஸ்கள் உள்ளன. இதில் எந்த விதமான வைரஸ் தாக்கினாலும், அந்த தடுப்பு மருந்து வேலை செய்யவேண்டும் என்ற சோதனையில் பல மருந்துகள் தோல்வியை சந்தித்துவிட்டன. அதனால்தான் டெங்கு தடுப்பு மருந்து இன்னும் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை.
நான்காம் படிநிலை
இந்த நிலையில் மருத்துவ நிபுணர்கள், சட்ட நிபுணர்கள், மக்கள் பிரதிநிதி என பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களை கொண்ட குழுவினரிடம் மருந்தின் செயல்திறன் குறித்த கலந்துரையாடல் நடைபெறும். இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைபடியே நான்காம் நிலை செயல்படுத்தப்படும். இந்த படிநிலையில், பெரும்பாலான மக்களிடையே சோதனை செய்யப்படும். அதாவது மருந்துகள் மருத்துவர்களிடம் தரப்படும். அவர்களிடம் வரும் நோயாளிகளுக்கு மருத்துவர் தடுப்பு மருந்தை பரிந்துரைப்பார். பல மருத்துவர்கள், மருந்தை தருவதால்,ஆயிரக்கணக்கான மக்களிடம் இந்த மருந்து செலுத்தப்படுகிறது. அதேநேரம், மருந்து மூலமாக பக்கவிளைவுகள் ஏற்பட்டால், மருத்துவர்களுக்கு தெரிந்துவிடும் என்ற அடிப்படையிலான சோதனை இது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து கேட்டபோது, ''உலகளவில் கொரோனா தடுப்பு மருந்துக்கான தேவை அதிகம் உள்ளது என்பதால் பல நிறுவனங்களும் சோதனையில் இறங்கியுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்களும் அந்த போட்டியில் உள்ளன என்பது நமக்கு மகிழ்ச்சிதான். அதேநேரம் நாம் முறையாக எல்லா நிலைகளையும் கடந்து மருந்தை சோதித்தால் நமக்கு பெருமை. அந்த நிலைகளை கடந்து ஒரு தடுப்பு மருந்து நமக்கு கிடைக்கவேண்டும்.