வெள்ளி, 10 ஜூலை, 2020

வட சென்னையில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது எப்படி?

கொரோனா பரவலில் சென்னையை மிரட்டிய ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது. 

சென்னையில் கொரோனா தொற்று பரவலின் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்தவை ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்கள். அஞ்சி நடுங்க வைத்த இந்த பகுதிகளில் அரசு இயந்திரங்கள் பம்பரமாய் சுழல, அவர்களோடு ஒன்றிணைந்து செயல்பட்டனர் வடசென்னை மக்கள். இதற்கு பலனும் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. 

ராயபுரம் மண்டத்தில் மே 15ல் இருந்து மே 31ம் தேதி வரை பதிவான 1,659 தொற்றாளர்களில், 234 பேர் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள குடிசைப் பகுதிகளில் கண்டறியப்பட்டவர்கள். ஜூன் 15 முதல் ஜூலை 5 வரை பதிவான 3,452 தொற்றாளர்களில், வெறும் 184 பேர் மட்டுமே குடிசைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இந்த பகுதிகளில் 14% இருந்த கொரோனா பாதிப்பு ஜூலை 5ம் தேதி நிலவரப்படி 5.3% குறைந்திருக்கிறது. 


அதேபோல் ஜூன் 1ம் தேதி நிலவரப்படி ராயபுரத்தில் 1,501 பேர் கொரோனாவில் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 703 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இந்த மண்டலங்களில் குணமடைவோரின் விகிதங்கள் 54.84% ஆகவும் 42.32% ஆகவும் இருந்தன. ஆனால் தற்போது, ஜூலை 1ம் தேதி நிலவரப்படி ராயபுரத்தில் 5,639 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர், தண்டையார்பேட்டையில் 4,668 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்த இரு மண்டலங்களில் குணமடைவோரின் விகிதங்கள் தலா 70% உயர்ந்துள்ளன. 

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தன்னலமற்ற தன்னார்வளர்களின் பணி அளப்பரியது. காலை 7 மணிக்கு பணியை தொடங்கும் இவர்கள், வீடு வீடாக சென்று மக்களை பரிசோதித்து அரசுக்கு பேருதவியாக இருந்துள்ளனர்.

இதேபோல் வட சென்னையின், தண்டையார்பேட்டை மண்டலத்தில் மே 15ல் இருந்து மே 31ம் தேதி வரை  பதிவான 1,205 தொற்றாளர்களில், 209 பேர் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள குடிசை பகுதிகளில் கண்டறியப்பட்டவர்கள். ஜூன் 15 முதல் ஜூலை 5 வரை 352 பேர் மட்டுமே குடிசை பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் 17% இருந்த கொரோனா பாதிப்பு ஜூலை 5ம் தேதி நிலவரப்படி 10% குறைந்திருக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கியதே நோய் தொற்று குறைந்ததற்கு முக்கிய காரணம் என்கின்றனர் ராயபுரம் பகுதி மக்கள். இருப்பினும் பசி பட்டினியை போக்க அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் உயிரை துச்சமாய் நினைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தியிருக்கிறது திருநங்கைகளின் நலனுக்காக இயங்கும் சகோதரன் அமைப்பு. ஆரம்பத்தில் மக்கள் தயங்கினாலும் பின்னாட்களில் சகஜமாக பழகத் தொடங்கி விட்டதாக அவ்வமைப்பின் நிர்வாகி ஜெயா நெகிழ்வுடன் கூறுகிறார். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் நாள்தோறும் கபசுர குடிநீர் வழங்குவது, காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்துவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை முடுக்கிவிட்டு வடசென்னையில் நோய் பரவலை சமாளித்திருக்கிறது சென்னை மாநகராட்சி.