சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகளின் வாழ்விடத்தை அழித்து வனச்சாலை அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தேக்கு, ஈட்டி, சந்தன மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் காட்டில் நிறைந்துள்ளன. தற்போது, புலிகளின் வாழ்விடத்தை அழித்து, வனப்பகுதியில் மூன்று இடங்களில் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு மாவட்ட வனத்துறை அதிகாரி மண் சாலை அமைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் லிமோடோசி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், சத்தியமங்கலம் புலிகள் காப்பக ஆளுமைக்குழு தலைவருமான ஈஸ்வரன், வனப்பகுதிக்குள் சென்று மண் சாலை அமைக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துள்ளார். மத்திய அரசின் அனுமதி பெறாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதுகுறித்து முதலமைச்சருக்கும், வனத்துறை அமைச்சருக்கும் கடிதம் அனுப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.