கொரோனா ஊரடங்கால், ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவு யாருக்கும் தெரியாது என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கொடுங்காலத்தில், வந்த மின் கட்டணமும் ஷாக் அடித்ததால், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல். ரவி நீதிமன்றத்தை நாடினார். அப்போது 4 மாதங்களுக்கும் சேர்த்து கட்டணம் வசூலிக்காமல், இரண்டிரண்டு மாதங்களாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஊரடங்கு தொடங்கியது முதல் மின்சார ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்யவில்லை என்றும் ஒவ்வொரு வீடுகளிலும் அவர்கள் பயன்படுத்திய மின்சார யூனிட்டின் அளவு யாருக்கும் தெரியாது என தமிழக அரசுத்தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற சூழலில், விதிகளின் அடிப்படையில், முந்தைய மாத கட்டணத்தையே வசூலிப்பதாக தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை கேட்ட நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டிலேயே முடங்கியதால் மின் கட்டணம் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது என கருத்து தெரிவித்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.