நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்க்கும் முடிவினைத் திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், இம்முடிவினை திரும்பபெற்று இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மருத்துவ மற்றும் பல்மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், இடஒதுக்கீட்டின்படி, ஒதுக்கப்பட்ட பின்னர் சில இடங்களை தனியாக வைத்திருப்பது உட்பட, மாநில அரசுகள் தங்களுக்கென சொந்தத் தேர்வு முறையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நீட் தேர்வை ரத்து செய்வதோடு, மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செயல் முறையை வைத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.