ஆந்திர காவல்துறையின் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் பயனாக, 4 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தாயும் மகனும் தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர்.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் பாலகொல்லுவைச் சேர்ந்தவர் போபா ஸ்ரீ லலிதா. அவர் கணவரை இழந்து குழந்தைகளுடன் வறுமையில் வாடி வந்த நிலையில், 2-வது மகனான ஸ்ரீனிவாஸ் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு காணாமல் போனார். ரயில் மூலம் விஜயவாடா சென்ற அவர், போலீசாரால் மீட்கப்பட்டு, அங்குள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் ஆந்திர காவல்துறை சார்பில் குழந்தை தொழிலாளர்களை மீட்பதற்காக ஆபரேஷன் முஸ்கான் கோவிட்-19 என்ற பெயரில் புதிய திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் பாலகொல்லுவை சேர்ந்த சீனிவாஸ், விஜயவாடாவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து விரைவான நடவடிக்கை எடுத்து சிறுவனை தாயிடம் ஒப்படைத்தனர். 4 வருடங்களுக்கு பிறகு மகனை கண்ட தாய், மகிழ்ச்சியில் கண்கலங்கி ஆரத் தழுவிக் கொண்டார்.
இது குறித்துக் கூறிய ஆந்திர டிஜிபி சவாங், 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தாயும் மகனும் மீண்டும் ஒன்று சேர உதவியது மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார். இது போன்ற விஷயங்கள் திருப்தி அளிப்பதுடன், தொடர்ந்து செயல்பட வைப்பதாகவும் கூறினார். ஆபரேஷன் முஸ்கான் மூலம் 72 மணி நேரத்தில் 2,739 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒவ்வொரு குழந்தைக்கும் பின்னால் இதயத்தை கலங்க வைக்கும் கதை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிய முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய காவல்துறையினரை பாராட்டுவதாகவும் டிஜிபி சவாங் தெரிவித்தார்.