கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் உலக நாடுகள் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பெரும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்த வைரஸுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் ஹைதராபாத்தை தலைமையகமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனமும், காடில்லா ஹெல்த்கேர் நிறுவனமும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறனர்.
பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து மருந்தினை தயாரிக்கும் பணியில் வெற்றி அடைந்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் கண்டறிந்திருக்கும் மருந்தினை மக்கள் மீது பரிசோதிக்கலாம் என்று ஐ.சி.எம்.ஆர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ள்ளது.
முதற்கட்ட சோதனைகளில் வெற்றி அடைந்துள்ள அம்மருந்து தற்போது மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஹரியானாவின் ரோதக்கில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் மருந்துகளை மனிதர்க்களுக்கு செலுத்தி நடத்தப்படும் சோதனைகள் ஹரியானாவின் ரோதக் பி.ஜி.ஐ. மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. மூன்று வகையான நோயாளிகள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டது. அம்மருந்து அவர்களின் உடலுக்குள் எந்த வித பிரச்சனையையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். கோவாக்ஸின் சிறப்பான முறையில் சோதனையில் வெற்றி பெரும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து வருகிறனர்.