சனி, 18 ஜூலை, 2020

மகத்தான தலைவனை இழிவுப்படுத்த முடியாது’: பெரியார் சிலை அவமதிப்பு குறித்து ராகுல் காந்தி

 கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைந்திருக்கும் பெரியார் சிலை மீது நேற்று காலை காவி சாயம் பூசப்பட்டிருந்தது. இதனால் கோபமடைந்த பெரியாரிய இயக்க தொண்டர்கள் அங்கு ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். காவி சாயம் பூசியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் தற்போது பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும், முக்கியத் தலைவருமான ராகுல் காந்தி தமிழில் ட்வீட் செய்துள்ளார். பெரியார் சிலை அவமதிப்பு குறித்த ஆங்கில நாளிதழின் செய்தியை பதிவிட்டு, “எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். ராகுலின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

Related Posts: