ஹாங்காங்கின் மீது புதிய அதிகாரத்தை செலுத்தும் வகையில் சீனா ஒரு சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை இயக்கியுள்ளது. இதனால் ஹாங்காங்கின் சுதந்திரம் மேலும் பறிப்போகும் வாய்ப்புள்ளதாக பிபிசிக்கு தெரிய வருகிறது.
கடந்த வருடம் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தால் அங்கு பெரும் போராட்டங்கள் வெடித்திருந்த நிலையில் தற்போது இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் ஹாங்காங் நீதியமைப்பின் சுயேச்சை அதிகாரத்தை பெரிதும் பாதிக்கும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அது என்ன சட்டம்? ஏன் மக்கள் அஞ்சுகின்றனர் என பார்ப்போம்.
அது என்ன சட்டம்?
இந்த சட்டம் இயற்றப்படுவதற்கு முன் அது குறித்த எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதன் பொருள் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சட்டம் குறித்து ஹாங்காங் மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லை என்பதாகும்.
பிரிட்டனிடமிருந்து ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட 23ஆவது ஆண்டில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, நாட்டிலிருந்து பிரிந்து செல்லுதல், மத்திய அரசின் அதிகாரத்தை குறைத்தல், பயங்கரவாதம் - வன்முறையை பிரயோகித்தல் அல்லது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல், வெளிநாட்டு அமைப்புகளுடன் சேருதல் ஆகியவை குற்றமாக கருதப்படும்.
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பை காக்கும் அமைப்புகளை சீனா நிறுவும், இதன்மூலம் ஹாங்காங்கில் சீனாவின் சட்ட அமலாக்க முகமை இயங்கும்.
சீனா ஏன் இவ்வாறு செயல்படுகிறது?
1997ம் ஆண்டு ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்படும், "ஒரு தேசம், இரண்டு அமைப்பு" என்ற முறையில் ஹாங்காங் இயங்கும் என முடிவு செய்யப்பட்டது.
அதாவது, சீனாவின் ஒரு பகுதியாக ஹாங்காங் இருக்கும். அதே சமயம் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை தவிர்த்து சுயாட்சியாக ஹாங்காங் இயங்கும்.
- சீனா இயற்றிய ஹாங்காங் தொடர்பான சட்டம் - எதிர்க்கும் உலக நாடுகள்; தடைவிதிக்க அமெரிக்காவில் ஒப்புதல்
- அமெரிக்காவின் தோல்வியை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் சீனா
இதன் காரணமாக சீனாவில் இல்லாத சுதந்திரத்தை, ஹாங்காங் மக்கள் அனுபவிக்கிறார்கள்.
இதன்மூலம் ஹாங்காங்கில் சில உரிமைகள் உண்டு. ஒன்றுகூடுதல், பேச்சு சுதந்திரம், சுயேச்சையான நீதியமைப்பு, சில ஜனநாயக உரிமைகள்தான் அவை.
மேலும் ஹாங்காங் தனது பாதுகாப்பு சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம். இது அடிப்படைச் சட்டத்தின் 23ஆவது பிரிவு ஆகும்.
கடந்த வருடம், ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் மசோதா ஒன்றை ஏப்ரல் மாதம் அந்நாடு அறிமுகப்படுத்தியது.
இதற்கு ஹாங்காங் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். போராட்டத்தில் இறங்கினார்கள். வன்முறை வெடித்தது. சீனாவுக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு ஆதரவான இயக்கமாக அது உருவெடுத்தது. சீனா மீண்டும் இதுபோல நடப்பதை விரும்பவில்லை.
ஹாங்காங்கில் சீனா எவ்வாறு அதிகாரம் செலுத்தும்?
ஹாங்காங்கில் சீனா ஒரு தேசிய பாதுகாப்பு அலுவலகத்தை அமைக்கும். அது தகவல்களை சேகரித்து, தேசிய பாதுகாப்பிற்கு எதிரான "குற்றங்கள் குறித்து கையாளும்". இந்த அலுவலகம் சில விசாரணைகள் சீனாவில் நடைபெறவும் ஒப்புதல் அளிக்கும். ஆனால் "குறைந்த அளவிலான வழக்குகளிலேயே" தனக்கு அந்த அதிகாரம் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
மேலும், ஹாங்காங் சட்டத்தை அமலாக்க தனது தேசிய பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும். அதில் சீனாவால் நியமிக்கப்பட்ட ஒரு ஆலோசகர் இருப்பார்.
ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் குறித்து விசாரிக்க நீதிபதிகளை நியமிப்பார். இது நீதித்துறையின் சுயேச்சைத் தன்மையை பாதிக்கும் என அச்சங்கள் எழுந்துள்ளன.
தேசிய பாதுகாப்புக்கு எதிரான குற்றங்களுக்கு ஐந்திலிருந்து பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என சட்டத்தை இயற்றிய சீன கமிட்டியில் இருந்த ஒரு ஹாங்காங்கை சேர்ந்த யு-ச்சுங் தெரிவித்துள்ளார்.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த சட்டம் எவ்வாறு செயலாக்கப்பட வேண்டும் என்பதில் சீனாவுக்கே அதிகாரம் உண்டு. ஹாங்காங்கின் நீதியமைப்பிற்கோ அல்லது கொள்கை அமைப்பிற்கோ அதிகாரம் இல்லை. இந்த சட்டம் ஹாங்காங்கின் ஏதேனும் சட்டத்தோடு முரண்பட்டால் அப்போது சீனாவின் சட்டமே செல்லுபடியாகும்.
இந்த சட்டம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே ஹாங்காங்கில் பலர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாங்காங் மக்கள் ஏன் அச்சப்படுகின்றனர்?
தேசிய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும்போது ஹாங்காங் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த சட்டத்தின் மூலம் ஹாங்காங்கின் சுதந்திரம் பறிபோகும் என பலர் அஞ்சுகின்றனர்.
"இது கருத்துச் சுதந்திரத்தை பெரிதும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல். ஹாங்காங் மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் நிச்சயம் பாதிக்கும்," என ஹாங்காங் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் ஜோனஸ் சான் தெரிவித்துள்ளார்.
சிலர் முகநூலில் தங்கள் பதிவுகளை அழிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தேர்தலில் நிற்க தடை ஏற்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
மேலும் ஹாங்காங்கின் சுயேச்சை நீதியமைப்பு அழிந்து, சீனாவில் உள்ளது போலான ஒரு நீதியமைப்பு ஏற்படும் என பலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
"சீனாவின் குற்றவியல் அமைப்பை, ஹாங்காங்கின் சட்ட அமைப்பின் மீது அவர்கள் திணிக்கப்பார்க்கிறார்கள்," என்கிறார் பேராசிரியர் சான்.
ஜனநாயக ஆதரவு ஆர்வலர்களில் ஒருவரான ஜோஷுவா வாங், வெளிநாட்டு அரசுகளிடம் தங்களின் போராட்டத்திற்கு அதரவு கோரி வருகிறார். ஆனால் இப்போது இந்த சட்டத்தால் அந்த மாதிரியான பிரசாரம் ஒரு குற்றமாக பார்க்கப்படும். மேலும் பலர் இந்த சட்டமானது பின்தங்கிய ஒரு நிலைக்கு நாட்டை தள்ளிவிடும் என அஞ்சுகின்றனர்.
ஹாங்காங்கின் சுதந்திரம் பறிபோனால் அதன் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படும் என பலர் அஞ்சுகின்றனர்.
சீனாவால் இதனை செயல்படுத்த முடியுமா?
ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லாம், இந்த சட்டவரைவை விரைவில் நிறைவேற்ற சீனாவுக்கு ஒத்துழைப்பு தரப்படும் என தெரிவித்திருந்தார். இது ஒரே நாடு இரண்டு அமைப்பு கொள்கையை பெரிதும் மீறுவது என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.