தவறான கண்ணோட்டங்களை அளிக்கக்கூடிய செய்தியோ, போலிச் செய்தியோ, யாரை இலக்காக கொண்டு வெளிவருகிறதோ, அவர்களுக்கு பெரிய ஆபத்தை அதனால் உருவாக்க முடியும். கொரோனா தொற்று பரவிவரும் இந்த காலத்தில், உண்மையான பல செய்திகள், இணையத்தில் சரிபார்க்கப்படாமல் வெளியாகும் ஏகப்பட்ட தகவல்களால் நசுக்கப்படுகின்றன. இது இந்தியாவில் குறிப்பாக முக்கிய பிரச்சனையாக உள்ளது.
இவ்வாறு வெளிவரும் தவறான தகவல்கள், சிறுபான்மை இன, மத மக்களுக்கு அதிக பின்விளைவுகளை ஏற்படுத்துவதோடு, இறைச்சி வியாபாரம் போன்ற குறிப்பிட்ட சில தொழிற்துறையையும் பாதிக்கின்றன.
பிபிசியின் உண்மை கண்டறியும் குழு, இவ்வாறு வெளியாகும் சில தவறான தரவுகள் எந்த அளவிற்கு உள்ளன என்பதையும், இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள சிலர் குறித்து கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரவ, மதரீதியிலான போலித்தரவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாலும், கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், இது சற்று அதிகமாகவே கவனிக்க வைத்துள்ளது என்று கூறலாம்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில், இந்தியாவின் ஐந்து உண்மைத் தன்னை சரிபார்க்கும் இணையதளங்களால், கண்டறிந்து விளக்கப்பட்ட போலிச் செய்திகளை நாங்கள் எடுத்துக்கொண்டோம்.
அவை நான்கு தலைப்புகளுக்கு கீழ் வருகின்றன:
1. கொரோனா நோய்ப்பரவல்
2. பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி மத வன்முறைகள்
3. குடியுரிமை திருத்தச் சட்டம்
4. இஸ்லாமிய சிறுபான்மையினர் குறித்து கூறப்படும் கருத்துகள்
இந்தியாவின் உள்ள ஐந்து உண்மைத் தன்மை சரிபார்க்கும் இணையதளங்கள் வெளியிட்டுள்ள 1447 கட்டுரைகளில் கொரோனா நோய் குறித்த தகவல்களை சரிபார்த்தவை மட்டும் 58% இருக்கின்றன.
இதில் பெரும்பான்மையானவை, கொரோனாவிற்கான மருந்து, பொதுமுடக்கம் குறித்த புரளிகள் மற்றும் இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்பது குறித்த கூற்றுகள் ஆகும்.
ஜனவரி முதல் மார்ச் மாதத்தின் ஆரம்ப காலம் வரை( கொரோனாவின் பரவல் அதிகம் ஆகும் முன்பு), போலிச் செய்திகள் பலவும், இந்தியாவின் குடியுரிமைத் திருத்த சட்டம் குறித்தே பெருமளவில் உள்ளன.
இந்தச் சட்டம், இந்தியாவின் அருகாமையில் அமைந்துள்ள மூன்று நாடுகளிலிருந்து (பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கனிஸ்தான்) வரும் அந்நாடுகளில் உள்ள மத சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை அளிக்கிறது. ஆனால், அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கக்கூடாது.
இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று கூறி, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
அந்த சமயத்தில் வெளியான பல்வேறு உறுதி செய்யப்படாத தகவல்களும், வடகிழக்கு டெல்லியில் அமைந்துள்ள இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் நடந்த மத வன்முறைகளுக்கு உந்துகோலாக அமைந்தன.
தவறாக சித்தரிக்கப்பட்ட காணொளிகள், போலியான புகைப்படங்கள், பழைய புகைப்படங்களைப் பயன்படுத்துதல், வேறு காரணங்களுக்காக நடந்த சம்பவங்களை இந்த வன்முறையின்போது நடந்தவையாக கண்பிப்பது ஆகியவையும் இவற்றில் அடங்கும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது என்ன நடந்தது?
எங்களின் ஆய்வில், ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில், இஸ்லாமியர்களை குறிவைத்து பல தவறான தகவல்கள் வெளிவந்ததை கண்டறிய முடிந்தது.
டெல்லியில் நடந்த தபிலிக் ஜமாத் குழுவை சேர்ந்தவர்களின் நிக்ழச்சியில் பங்கேற்ற பல இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு இவை நடந்துள்ளன.
அந்த குழுவைச் சேர்ந்தவர்களில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, இஸ்லாமியர்கள் இந்த வைரஸை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்ற ரீதியில் வெளியான பல போலிச்செய்திகள் வைரலாகத் தொடங்கின.
இந்திய நாட்டின் பல பகுதிகளில், இஸ்லாமியர்களின் கடைகளில் பொருட்களை வாங்குவதை நிறுத்துமாறு அழைப்புகளும் விடுக்கப்பட்டன.
இஸ்லாமியர் ஒருவர் ரொட்டித்துண்டின் மீது எச்சில் துப்புவது போல வாட்சப் செயலியில் காணொளி ஒன்று வெளியான பிறகே, இஸ்லாமியர்களின் வியாபாரங்களை புறக்கணிப்பதற்கான அழைப்புகள் அதிகமாகின என பிபிசியிடம் கூறினார் , தனது உண்மையான பெயரை கூற விரும்பாத ஒரு காய்கறி வியாபாரி இம்ரான். (பெயர் மாற்றப்பட்டு உள்ளது)
உத்தரப் பிரதேசத்தில் வாழும் இவர், "நாங்கள் வழக்கமாக விற்பனை செய்யும் கிராமங்களுக்குக்கூட காய்கறிகளை எடுத்துச்செல்ல பயந்தோம்," என்கிறார் இம்ரான். இம்ரானும், இந்த பகுதியைச் சேர்ந்த சில முஸ்லிம் வியாபாரிகளும், இந்த நகரில் அமைந்துள்ள சந்தையில் மட்டுமே இப்போது காய்கறிகளை விற்பனை செய்கிறார்கள்.
டெல்லியில் உள்ள சிறுபான்மையினர் ஆணையம், இஸ்லாமிய மக்களை தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் அனுமதிக்காதவர்களையும், இஸ்லாமியர்கள் வியாபாரம் செய்வதை தடுப்பவர்களை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என சட்டப்படி அறிக்கை வெளியிட்டுள்ளது.
"தப்லிக் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடந்தன." என்கிறார் சிறுபான்மையினர் ஆணையத்தில் தலைவர் சஃபரூல் இஸ்லாம்.
இறைச்சி வியாபாரிகள் மீதான தாக்குதல்
கொரோனாவிலிருந்து தப்பிக்க, இறைச்சி சாப்பிடுவதை விடுத்து, காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பொய்யான தகவல் இந்தியா முழுவதும் அதிகம் பகிரப்பட்டது.
இத்தகைய தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க இந்திய அரசும் சில பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.
இத்தகைய தவறான செய்திகள், இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள, இஸ்லாமியர் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களையும் பாதித்தது.
ஏப்ரல் மாதம், இந்திய அதிகாரிகள் நடத்திய கணக்கெடுப்பின்படி, கோழி இறைச்சி விற்பனையில் நாட்டிற்கு ஏற்பட்ட 130 பில்லியன் (13000 கோடி) ரூபாய் இழப்பிற்கு இந்த தவறான தகவல் காரணமும் பங்களித்துள்ளது என்பதை கண்டறிந்தார்கள்.
"எங்களிடம் உள்ள கோழிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் அவற்றை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம்" என்றார் மராட்டிய மாநிலத்தின் கோழி இறைச்சி வியாபாரியான சுஜித் பிரபாவ்லே.
"எங்களின் வியாபாரம் 80% குறைந்துவிட்டது"
"சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவும் என்று வாட்ஸ்சப்பில் வந்த செய்தியை நான் பார்த்தேன். அதிலிருந்து மக்கள் எங்களிடம் இறைச்சி வாங்குவதை நிறுத்தி விட்டார்கள்." என்கிறார் தௌஹித் பராஸ்கர் என்கிற வியாபாரி.
மிகவும் பிரபலமான போலித் தகவல்களில் ஒன்று, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இறைச்சி கடைகளை மூடுமாறு கேட்டுக்கொண்டார் என்பதும் ஒன்றாகும்.
"தங்களுக்கு நம்பிக்கையான ஒரு வழியிலிருந்து தகவல்கள் வரும்போது, அதை ஆராய்ந்து பார்க்காமல் மக்கள் நம்புகிறார்கள்" என்கிறார் ஆல்ட்-நியூஸ் செய்தி நிறுவனத்தின் தலைவர் பிரதிக் சின்ஹா.
போலிச்செய்திகளுக்கு பலியானது இறைச்சி வியாபாரத்துறை மட்டுமல்ல.
கோழி இறைச்சி விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், முட்டை மற்றும் கோழித்தீவன விற்பனையும் பாதிக்கப்பட்டன.
ஜனவரி முதல் ஜூன் வரையில், முட்டையின் விலை டெல்லியில் 30%, மும்பையில் 21% குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோழித்தீவனம் விற்கும் வியாபாரிகள் கூட, வியாபார வீழ்ச்சி காரணமாக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலையைவிட 35% குறைவான விலைக்கே அவற்றை விற்கிறார்கள்.