வெள்ளி, 3 ஜூலை, 2020

சாத்தான்குளம் காவல் நிலையத்தை மீண்டும் காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவு

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த தந்தை-மகன் மீதான வன்முறை வழக்கில், கடந்த வாரம் வருவாய்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சாத்தான்குளம் காவல்நிலையத்தை, மீண்டும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய் நிர்வாகத்துறையிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோது, இந்திய காவல்துறைச் சட்டம் அறிமுகமான 159 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றதில்லை என ஓய்வுபெற்ற கேரள முன்னாள் டிஜிபி என்.சி.ஆஸ்தானா ட்விட்டரில் பதிவிட்டார். சமூகவலைத்தளங்களில் இந்த பதிவு கவனத்தை பெற்றது.

சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகளின் வன்முறையால் இறந்ததாக சொல்லப்படும் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் மரணம் குறித்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டதால், காவல்நிலையத்தை மீண்டும் காவல்துறையிடம் ஒப்படைக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்ற கோவில்பட்டி குற்றவியல் நடுவர் பாரதிதாசனை காவலர்கள் மிரட்டியதாகப் புகார் எழுந்தது. இதனை அடுத்து, தூத்துக்குடி எஸ்.பி. பாலகோபாலன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

நீதிமன்ற விசாரணைக்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு தரவில்லை என்ற புகாரில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஜூன் 30ம் தேதி உத்தரவிட்டது.

தற்போது வழக்கு தொடர்பாக ஆதாரங்களையும், தடயங்களையும் தடயவியல் துறையினர் சேகரித்துள்ளனர் என்பதாலும் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது என்பதாலும் காவல்நிலையத்தை வருவாய் துறையிடம் இருந்து மீண்டும் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் கோரினார். இதனை அடுத்து, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் , பி. புகழேந்தி அமர்வு சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய் துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் உத்தரவை அளித்தது.

தேடப்படும் நபராக அறிவிப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவலில் இருந்து தப்பிய தலைமை காவலர் முத்து ராஜை சிபிசிஐடி காவல்துறை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்துவரும் நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், தலைமறைவாக இருந்த உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோர் சிபிசிஐடியின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தனர். அதோடு, காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி அதிகாரிகள் நள்ளிரவில் துரத்தி பிடித்ததாக செய்திகள் வெளியாகின. தற்போது காவலர் முத்துராஜ் தலைமறைவாகிவிட்டார் என்பதால் அவரை தேடி வருவதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி சங்கர், "முதல் தகவல் அறிக்கையில் 5 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் காவலர் முத்துராஜை தவிர 4 பேரை கைது செய்துள்ளோம்.

தலைமறவாகியுள்ள முத்துராஜை இரண்டு, மூன்று நாட்களில் கைது செய்வோம். சில கேமரா காட்சிகள் கிடைத்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். தேவைப்பட்டால், விசாரணையில் மேலும் சிலர் கூட கைது செய்யப்படலாம். இதில், அரசியல் தலையீடு இருப்பது என்ற தகவலெல்லாம் உண்மையல்ல. தொடர்ந்து நேர்மையான விசாரணை நடந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.