சனி, 18 ஜூலை, 2020

கொரோனா தடுப்பு மருந்து : அடுத்த மூன்று மாதங்களுக்கு மாபெரும் இலக்குடன் சீரம் இன்ஸ்டிட்யூட்

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா ப்ரைவேட் லிமிட்டட் நிறுவனம் தான் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகளை உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனம். இதுவரையில் 1.5 பில்லியன் டோஸ்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராக உருவாக்கப்படும் தடுப்பு மருந்தை உலக அளவில் கொண்டு சேர்க்க AstraZeneca-வுடன் கூட்டு சேர்ந்துள்ளது இந்த நிறுவனம்.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நிமோகோக்கல் (Pneumococcal vaccine) தடுப்பூசியை அதிக அளவில் தயாரிப்பதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (Drug Controller General of India) அனுமதி அளித்துள்ளது. சீரம் இன்ஸ்டிட்யூடின் தலைமை இயக்குநர் ஆதார் பூனவல்லா இந்த தடுப்பு மருந்து உருவாக்கம் தொடர்பாக அனுராதா மஸ்கரென்ஹாஸிடம் பேசினார்.

கோவிட் -19க்கு எதிரான தடுப்பூசி கிடைக்க எவ்வளவு காலம் ஆகும்?

நிர்வகிக்க வேண்டிய தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அனைத்து தரப்பினருக்கும் தடுப்பு மருந்து கிடைக்க கால தாமதம் ஆகும். மேலும் உலகின் அனைத்து பகுதியிலும் இருக்கும் மருந்துகளை நிர்வகிக்க வேண்டியதாலும் இந்த தாமதம் ஏற்படும். முதலில் உரிமம் பெறும் மருந்து தான் அனைத்திலும் சிறந்தது என்று கூறி விட முடியாது. கோவிட் -19 தடுப்பூசி தயாரிக்க பல்வேறு அறிவியல் அணுகுமுறைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, மேலும் உலகிற்கு வழங்கப்பட வேண்டிய சிறந்த தடுப்பூசி எது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கும் தடுப்பூசியை அனைத்து தரப்பிலும் எடுத்துச் செல்ல உதவும் வகையில் சீரம் இன்ஸ்ட்டியூட் இங்கிலாந்தின் ஆஸ்ட்ராஜெனேக்காவுடன் (AstraZeneca) இணைந்துள்ளது. மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் எவ்வளவு நம்பிக்கைக்குரியவை மற்றும் சீரம் நிறுவனத்தில் உள்ள திட்டங்கள் என்ன?

முன்னணி தடுப்பூசி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது AstraZeneca. அங்கு தான் சீரம் நிறுவனம் லட்சக்கணக்கான டாலர்கள் வர்த்தகத்திற்கு உடன்படுக்கை செய்துள்ளது. நாங்கள் AstraZeneca-வை நம்பவில்லை என்றால் இதனை செய்திருக்க மாட்டோம். AstraZeneca-வின் தடுப்பு மருந்து குறித்து கேட்ட போது, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். நாங்கள் காத்திருந்து தான் முதற்கட்ட சோதனை முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியும். இதுவரை எவ்வளவு மருந்துகளை தயாரித்து உள்ளோம் என்று கூற இயலாது. ஆனால் உரிமம் கிடைத்த அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாங்கள் மில்லியன் கணக்கில் மருந்துகளை உற்பத்தி செய்ய உள்ளோம் என்று கூறியுள்ளார். தடுப்பூசி தயாரிக்கத் தொடங்க நாங்கள் பல மில்லியன் டாலர்களை கேபக்ஸ் மற்றும் ஒபெக்ஸில் முதலீடு செய்துள்ளோம்.

சீரம் நிறுவனத்தால் காசநோய்க்கு தயாரிக்கப்பட்ட மருந்து தான் VPM1002. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த மருந்தால் மாற்றங்கள் நிகழுமா என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் தற்போதைய நிலை என்ன?

காசநோய்க்கான VPM1002 மருந்து தற்போது க்ளினிக்கல் ட்ரையலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்த மருந்து 1000 பேருக்கு உட்செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்த தடுப்பு மருந்து கொரோனாவின் தீவிரத்தை குறைத்ததா என்பதை அறிந்து கொள்ளலாம்.

நிமோகோக்கல் தடுப்பூசியின் செயல்முறைக்கு எவ்வளவு காலம் ஆனது?

நிமோகோகல் பாலிசாக்கரைடு கான்ஜுகேட் தடுப்பூசி (pneumococcal polysaccharide conjugate) 5 ஆண்டுகள் பல்வேறு உலகளாவிய சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகே உரிமம் வாங்கப்பட்டது. ஒரு தடுப்பூசி செயல்பாட்டிற்கு வர இவ்வளவு நாளாகும். ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியாவால் குழந்தைகளிடம் உருவாகும் நிம்மோனியாவுக்கு எதிராகவே இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்த தடுப்பூசியை இந்தியாவில் சந்தைப்படுத்த, மனிதர்கள் மீது நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை சமர்பிக்கும் படி கேட்டுக் கொண்டது. முதலில் டி.சி.ஜி.ஐயிடம் அனுமதி பெற்ற பிறகே மூன்று கட்டங்களாக மனிதர்கள் மீது ஆராய்ச்சியை நடத்தியது. மனிதர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகள் மறுசீராய்வு செய்யப்பட்ட பிறகே ஜூலை 14ம் தேதி அன்று உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட pneumococcal polysaccharide conjugate தடுப்பூசியை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் படி உலக அளவில் குழந்தைகளின் மரணத்திற்கு நிம்மோனியா ஒரு முக்கிய நோயாக உள்ளது. இந்தியாவில் இந்த மருந்து எவ்வளவு தேவைப்படும்?

இந்தியாவில் 70 முதல் 80 மில்லியன் மருந்துகள் தேவைப்படும். ஆரம்பத்தில் தனியார் சந்தைகளில் 10 மில்லியன் மருந்துகள் தேவைப்படும். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்திய அரசு 50 முதல் 60 மில்லியன் மருந்துகளை டெண்டர்கள் மூலம் பெரும். உலக அளவில் 100 மில்லியன் மருந்துகள் தேவைப்படுகிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அந்த தேவையும் பூர்த்தி செய்யப்படும்.