கொரோனா வைரஸ் ஊரடங்கால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனாலும் கூட வன விலங்குகள், கடல் உயிரினங்கள் முன்பைக் காட்டிலும் அதிக சுதந்திர உணர்வுடன் சந்தோஷமாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கின்ற காரணத்தால் யானைகள், மான்கள், காட்டு விலங்குகள் தங்கள் இயல்பில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் கடல் வாழ் உயிரினங்களும் உல்லசமாக இருக்கின்றன.
ராமேஸ்வரம் பாம்பன் கடலில் நேற்று காலை டால்பின்கள் கூட்டமாக வந்து இங்கும் அங்கும் விளையாடித் திரிந்த காட்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறிது நேரத்தில் தூக்குப்பாலம் கடல் பகுதியை கடந்து தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு டால்பின்கள் வேகமாக நீந்தி வந்தன . இந்த பகுதியில் வாழும் டால்பின்கள் யாவும் கூட்டமாகவே வாழ்பவை என்பதால் இவைகளை இந்த பகுதியில் தனித்து காண இயலாது.
கடல் வாழ் உயிரினமான டால்பின்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதால் இதனை வேட்டையாடவோ, பிடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் சிறை தண்டனைகளை அனுபவிக்க வேண்டிய நிலை உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.