M S Seshadri , T. Jacob John
கோவிட் 19 சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்பாடு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருந்து, கொரோனா தொற்று நோயாளிகளிடம் பலவித மாற்றங்களை ஏற்படுத்துவதால், மருத்துவர்களால் ஒரு உறுதியான முடிவுக்கு வராத நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள ஹென்றி போர்டு மருத்துவமனை குழுமம், 2,500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு 6 யூனிட்களுக்கும் மேல்ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொடுத்து அவர்களிடையே சோதனையை நடத்தியுள்ளது. இதன் முடிவுகள் தற்போது அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அது அங்கீகரிக்கும் நிலையில் உள்ளதால் விரைவில் இந்த ஆய்வு முடிவுகள்ல இன்டர்நேசன்ல ஜர்னல் ஆப் இன்பெக்சியஸ் டிசீசஸ் ஜெர்னலில் வெளியிடப்பட உள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து, கொரோனாவால் ஏற்படும் மரணத்தை பெருமளவில் குறைக்க பயன்படுகிறது. ஆனால், பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதை நாம் இந்நேரத்தில் மறந்துவிடக்கூடாது.
மலேரியா அதிகம் பரவியுள்ள பகுதிகளில் செல்ல உள்ள மக்களுக்கு மலேரியா பாதிப்பை தடுக்கும் மற்றும் அதை குணப்படுத்தும் மருந்தாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் பல தலைமுறைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவுகள், மனிதர்களிடையே கண்டறியப்பட்ட நிலையில், இது தற்போது முடக்குவாதம் மற்றும் சிஸ்டமிக் லுபஸ் எரித்ரிமடோசஸ் உள்ளிட்டவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வளர்ச்சியடைந்த நாடுகளில், தற்போது மலேரியா நோயே இல்லை என்ற நிலைக்கு இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் தான் முக்கிய காரணம். முடக்குவாதத்திற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பலர் தற்போது இந்த மருந்தையே நம்பி உள்ளனர். இந்த மருந்தின் பக்கவிளைவுகள் அனைத்தும் தெரிந்ததனால், இதை பயமின்றி பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அது கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2002 மற்றும் 2006ம் ஆண்டுகளில் சிக்குன் குனியா பாதிப்பு பெருமளவில் இருந்தது. சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகளவில் கை கால் வீக்கம், வலி முதலியவை இருந்தது. இந்த குறைபாடுகள் ஆண்டு முழுவதும் வரை நீடித்தது. அப்போது மருத்துவர்கள், இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அவர்களுக்கு அளித்து சோதனைக்கு உட்படுத்தினர். முடிவுகள் சாதகமாகவே வந்தது. அதனையடுத்து பலருக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டது. ஆனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனே, நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவிட் 19 சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின்
கொரோனா வைரஸ் தொற்றும், ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்பாடும் கிட்டத்தட்ட சீனாவின் வூஹான் நகரத்திலேயே தோன்றியது எனலாம். ஏனெனில் அங்குள்ள முடக்குவாத சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில், ஹைட்ராக்சிகுளோரோகுயின் அளிக்கப்பட்ட மக்கள், கோவிட் தொற்றால் பாதிக்கப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பரீட்சார்த்தமாக சோதனை செய்து பார்க்க துவங்கினர்.
பாக்டீரியாவினால் ஏற்படும் க்யூ காய்ச்சலை (Q fever), ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து குணப்படுத்தும் என்பதை பிரான்ஸ் மருத்துவர்கள் அறிந்திருந்தனர். இதனையடுத்தே, கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அவர்கள் பரிசோதிக்க ஒப்புதல் தெரிவித்திருந்தனர். சார்ஸ் கொரோனாவைரஸ் முதலாம் வகை தொற்றை கட்டுப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து உதவுகிறது என்பது ஆய்வக சோதனை முடிவுகளில் தெரியவந்தது. இதனையடுத்து கோவிட் 19 தொற்றை உண்டாக்கும் இரண்டாம் வகை கொரோனா வைரசையும் இது கட்டுப்படுத்துகிறது என்பது ஆய்வில் தெரியவந்தது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து, வைரஸ் பல்கிப்பெருகுதலையும், அது, மனித ஓம்புயிரி உடலில் உள்ள சுவாச மண்டலத்தின் மேற்புற பகுதியில் சேகரம் ஆவதையும் தடுப்பதாக பிரான்ஸ் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.இதனையடுத்தே, சர்வதேச நாடுகளில், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து பயன்படுத்தப்படுவது துவங்கியது. இதன் பக்கவிளைவுகளை அறிந்தபோதும் அதனை கண்டுகொள்ளாத பலநாடுகள் நோயாளிகள் இறப்பு உள்ளிட்ட பல்வேறு அசாதாரண விளைவுகளை எதிர்கொண்டது.இதனையடுத்தே, இந்த மருந்து பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட துவங்கியது.
அமெரிக்காவில் கோவிட் 19 பாதிப்பு அதிதீவிரமாக பரவிவந்த நிலையில், அங்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து இருப்பு குறைவாக இருந்ததால், ஹைட்ராக்சிகுளோரோகுயின் அதிகம் உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவிடமிருந்து அதிகளவில் அமெரிக்கா ஏற்றுமதி செய்தது. அதேபோல, பிரேசில் நாட்டிற்கும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை ஏப்ரல் மாதத்தில் இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து பயன்பாட்டினால் அதிகளவில் மரணங்கள் ஏற்படுவதை அறிந்த உலக சுகாதார நிறுவனம், அந்த மருந்து பயன்பாடு குறித்த எச்சரிக்கையை வெளியிட்டது. பின் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை மறுஆய்வு செய்யவும் உத்தரவிட்டது. இதனையடுத்து, பல்வேறு நாடுகள் கோவிட் 19 சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்த தடைவிதித்தன.
அமெரிக்காவின் டெட்ராய்ட் மாகாணத்தில் 18 முதல் 76 வயதினரிடையே நடத்தப்பட்ட சோதனையில், நாள் ஒன்றுக்கு 400 மில்லிகிராம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் என நான்கு நாட்கள் வீதம் அளிக்கப்பட்டது. இவர்களில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து அளிக்கப்படாதவர்களில் 26.4 சதவீத மரணமும், ஹைட்ராக்சிகுளோரோகுயின் அளிக்கப்பட்டவர்களில் 13.5 சதவீத மரணமும் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து அபரிமிதமான அளவில் இருந்ததால், அதன் விலை குறைவாகவே இருந்தது. இருந்தபோதிலும், பல்வேறு மாநிலங்கள், கோவிட் 19 சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்த முன்வரவில்லை என்பதே நிதர்சனம்.
கொரோனா பாதிப்பால் ஏற்படும் மரணங்களை தவிர்க்க மருத்துவர்கள் டெக்சாமெத்தாசோன் மற்றும் பிளாஸ்மா சிகிச்சையை அங்கீகரித்தனர். இந்த 3 சிகிச்சை முறைகளிலும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாததால், மருத்துவர்கள் இந்த 3 முறைகளில் சோதனை நடத்த முடிவெடுத்தனர். இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொரோனாவால் ஏற்படும் மரணங்களிலிருந்து மக்களை பாதுகாக்க மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் சேஷாத்ரி, வேலூரில் உள்ள கிறித்தவ மருத்துவ கல்லூரியில் மருத்துவ உட்சுரப்பியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆவார். தற்போது, ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனையின் இயக்குனராக உள்ளார்.
டாக்டர் ஜான், வேலூரில் உள்ள கிறித்தவ மருத்துவ கல்லூரியில் கிளினிக்கல் மைக்ரோபயாலஜி துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆவார். இவர் இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.