பண மோசடி தடுப்பு சட்டம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் மற்றும் வருமானவரித்துறை சட்டம் இவைகளின் சட்டவிதிகளுக்கு முரணாக நிதியுதவி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்த குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது.
அமலாக்க பிரிவு சிறப்பு இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில், வருமானவரித்துறை, நிதித்துறை, ஊரக மேம்பாட்டுத்துறை, உள்துறை உள்ளிட்டவைகளின் பிரதிநதிகள் உறுப்பினர்களாக இருப்பர்.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராஜீவ் காந்தி பவுண்டேசன், ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு டிரஸ்ட்களுக்கு சீனாவிடமிருந்து பெறப்பட்ட நிதியுதவிகளில், பண மோசடி தடுப்பு சட்டம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் மற்றும் வருமானவரித்துறை சட்டம் உள்ளிட்டவைகளில் சட்டவிரோத பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து இந்த குழு விசாரணை நடத்தும்.
இந்த குழு, இந்த டிரஸ்டுகள், பவுண்டேசன்களுக்கு வந்த நிதி ஆதாரங்கள், வெளிநாடுகள், உள்நாட்டு அமைப்புகள், மற்ற நிறுவனங்கள், இதில் சட்டத்திற்கு புறம்பாக ஏதேனும் பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து ஆராயும். முதலில் ஆவண சரிபார்ப்புகள் நடத்தப்படும். பின் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்த இந்த குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி பவுண்டேசன், ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு டிரஸ்டின் தலைவர்களாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளனர். ராஜீவ் காந்தி பவுண்டேசனில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஜூன் 25ம் தேதி, பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே பி நட்டா இதுகுறித்து கூறியிருந்ததாவது, 2005-06ம் ஆண்டில், சீனாவிடம் இருந்து ராஜீவ் காந்தி பவுண்டேசனுக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாக பெறப்பட்டுள்ளது. இதற்கு பிரதிபலனாக, சீன தூதரகத்திற்கு, எத்தகைய தகவல்களை காங்கிரஸ் கட்சி தந்ததோ என்று நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
சோனியா காந்தி தலைவராக இருந்துவரும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை சீனாவிடம் இருந்து நன்கொடைகளைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நன்கொடை பெறப்பட்டுள்ளது. அனைத்தும் ஹவாலா பரிமாற்றமாக இருந்துள்ளது. இதற்கு சோனியா காந்தி பதில் அளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
லடாக் பகுதியில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மீது சீனா நடத்திய கொடூர தாக்குதல் தொடர்பாக, பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி, தற்போது இந்த சீனாவிடம் இருந்து பெற்ற நிதியுதவி விவகாரத்தை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி சத்தியத்திற்காக போராடுபவர்களை மிரட்ட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மோடி உலகம் அவரைப் போன்றது என்று நம்புகிறார். ஒவ்வொருவருக்கும் விலை இருப்பதாக அவர் நினைக்கிறார் அல்லது மிரட்டலாம். சத்தியத்திற்காக போராடுவோருக்கு விலை இல்லை, மிரட்ட முடியாது என்பதை அவர் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்வி தெரிவித்துள்ளதாவது, காங்கிரஸ் கட்சி மற்றும் ராஜீவ் காந்தி பவுண்டேசன், இதுவரை எவ்வித தகவல்களையும் மறைக்கவில்லை. அவைகள் வெளிப்படையாக நடந்துகொள்வதால் தங்களுக்கு எவ்வித பயமும் இல்லை. ஆனால், எங்களைப்பார்த்து கேள்வி கேட்கும் இந்த மத்திய அரசு, ஏன் விவேகானந்தா பவுண்டேசன், பாரதிய ஜனதா ஓவர்சீஸ் நண்பர்கள் அமைப்பு, இந்தியா பவுண்டேசன், ஆர்எஸ்எஸ் அமைப்புகளை பார்த்து கேட்பதில்லை
ராஜீவ் காந்தி பவுண்டேசனில் யார் வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம், யார் கேட்கும் கேள்விக்கும் நாங்கள் தாராளமாக பதில் அளிக்க தயாராக உள்ளோம். நாங்கள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயலாற்றிவருவதால் எங்களுக்கு எவ்வித விசாரணைக்கும் தயாராக உள்ளோம். எங்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, விவேகானந்தா பவுண்டேசன் உள்ளிட்ட அமைப்புகள் மீது விசாரணை நடத்துமா என்று சிங்வி கேள்வி எழுப்பிள்ளார்.
காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டாலும் அதற்கு யாரும் தகுந்த பதிலை அளிப்பதில்லை. விசாரணை அமைப்புகளை கொண்டு கேள்வி கேட்பவர்களை மிரட்டி வருகின்றனர். நாங்கள், ராஜீவ் காந்தி பவுண்டேசன், ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிறுவனம், இந்திரா காந்தி நினைவு டிரஸ்ட் உள்ளிட்ட அமைப்புகளின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆவணங்களாக பதிவு செய்து பாதுகாத்து வருகின்றோம். நாங்கள் சட்டப்படி நடப்பதால் எங்களுக்கு எவ்வித பயமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறியதாவது, கொரோனா தொற்று ஏற்பட்டு பொருளாதாரம் சரிவடைந்துள்ள நிலையில், அதை மீட்கும் நடவடிக்கையை விட்டு, மத்திய அரசு, காங்கிரஸ் கட்சியுடன் மல்லுக்கட்டி வருகிறது.ராஜீவ் காந்தி பவுண்டேசன், ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிறுவனம், இந்திரா காந்தி நினைவு டிரஸ்ட் உள்ளிட்ட அமைப்புகளின் மீது விசாரணை நடத்த உள்ளதாக அவர்கள் அறிவிக்கும்போதே, அவர்கள் எத்தகையவர்கள் என்பது புலனாவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜே.பி. நட்டா பதிவிட்ட குற்றச்சாட்டில், இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் நாட்டு நலன் சார்ந்து உள்ளது. நாம் அனைவரும் மோடியின் தலைமையில் ஒன்றுபட்டுள்ளோம். ஆனால், ஒரு குடும்ப கட்சி மட்டும், நாட்டு நலனுக்கு எதிராக சீனாவிடமிருந்து நிதியுதவி பெற்று வந்துள்ளது அந்த கட்சி செய்த தவறினால் தான், இந்தியா, 43 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அளவிலான நிலத்தை சீனாவிடம் பறிகொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது, 2005-06ம் ஆண்டில், சீன தூதரகத்தின் மூலம், காங்கிரஸ் கட்சியும் அதன் அறக்கட்டளை அமைப்புகளும் நிதியுதவி பெற்றிருப்பது உண்மை என தெரியவந்துள்ளது. இந்த நிதியுதவி எதற்காக பெறப்பட்டது என்ற உண்மையை நாட்டுமக்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2005ம் ஆண்டு நிகழ்ந்துள்ள இந்த பணப்பரிமாற்றம் குறித்து பொருளாதார ஆய்வறிக்கை கவுன்சில் தலைவர் பிபேக் டெப்ராயிடம் கேட்டபோது, நான் 2005ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதியே வெிறியேறிவிட்டேன். பின் இந்த குழுவின் பொறுப்பு இயக்குனராக பி டி கவுசிக் நியமிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருந்தார்.
கவுசிக்கை தொடர்பு கொண்டபோது, அவர் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் ரன்தீப் சூரஜ்வாலா தெரிவித்துள்ளதாவது, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, 2005ம் ஆண்டிலேயே இருப்பதை விட்டுவிட்டு, நடப்பு 2020ம் ஆண்டில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா மீண்டும் கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. கிழக்கு லடாக் பகுதியில் சீனாவின் படைகள் இருப்பது இந்திய நலனுக்கு ஆதரவானதா? இத்தகைய முக்கிய கேள்விகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை திசைதிருப்பும் நடவடிக்கைகளில் பாரதிய ஜனதா ஈடுபட்டு வருவதாக சூரஜ்வாலா தெரிவித்துள்ளார்.