அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13-ஆம் தேதிக்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபிச்செட்டி பாளையத்தில் கட்டப்படும் கூடுதல் பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சிகளின் வழியே பாடங்கள் நடத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகும் அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா பொது முடக்கநிலை காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், சூழ்நிலைகள் மாறுகின்ற போது எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பதை அமைச்சர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்களுடன் கலந்து பேசி அதன் பிறகு முதல்வர் முடிவினை மேற்கொள்வார் என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், தமிழகத்தில் செயல்படும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஏற்கனவே இணைய வழிக் கல்வியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வரையறைகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பெற்றோர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்குத் தேவைப்படும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப அணுகல் இந்தியாவில் சுமார் 56 சதவீத மாணவர்களிடம் இல்லை என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. குழந்தை உரிமைகள் தொடர்பான தன்னார்வ தொண்டு நிறுவனம் ‘ஸ்மைல் அறக்கட்டளை’ நடத்திய இந்த ஆய்வில், ” தொலைக்காட்சி அணுகல் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 31.01 சதவிகிதம் என்று தெரியவந்தது.
முன்னதாக, பொதுமுடக்கக் காலத்தின் போது மாணவர்கள் தங்கள் இல்லங்களில், நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிடுவதற்காக, தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் துணையுடன் கல்விசார் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக மாற்றுக்கல்வி அட்டவணை, மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதலுடன், தேசிய கல்வி ஆராய்ச்சிக் கவுன்சில் (NCERT) அமைப்பால் தயாரித்தது.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற பல்வேறு சமூக ஊடகக்கருவிகளை பயன்படுத்த முடியாத பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாக வழிகாட்டுவது, அழைப்பு விடுத்து அவர்களுடன் பேசி அவர்களை வழிநடத்துவது, ஆகியவற்றுக்கான வழிமுறையும் இந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ளன.