வெள்ளி, 17 ஜூலை, 2020

கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய மறுப்பு.... சுகாதார ஊழியர்கள் கைவிட்டதால், அடக்கம் செய்த உறவினர்கள்....

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அந்த வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தால், அவரது உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்காமல், பாதுகாப்பான முறையில் சுகாதாரத்துறை ஊழியர்களே அடக்கம் செய்து வருகின்றனர்.

ஆனால், இதற்கு நேர்மாறாக, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.  ஆரணி டவுன் கொசப்பாளையம் அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் 62 வயது முதியவர். இவர், அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

மருத்துவமனையில் முதியவருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். முதியவரின் உடலை, வேலூர் அரசு மருத்துவ கல்லலூரி மருத்துவமனையிலிருந்து ஆரணி சுடுகாட்டிற்கு அடக்கம் செய்ய கொண்டு வந்தனர். ஆனால், முதியவரின் உடலை சுகாதாரத்துறை ஊழியர்கள் அடக்கம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், முகக்கவசம், உடல் கவசம் உள்ளிட்டவற்றை தாங்களே அணிந்து கொண்டு, முதியவரின் உடலை அடக்கம் செய்தனர்.

இது குறித்து, ஆரணி நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் உறவினர்கள் முறையிட்டனர். ஆனால், அதிகாரிகள் சரிவர பதில் அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கேட்க, நமது செய்தியாளர், அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவர்கள் அந்த தொலைப்பேசி அழைப்பை எடுக்கவில்லை.

விதிகளை மீறி செயல்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற ஒரு சம்பவம், மீண்டும் நடைபெறாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்