கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு பெறப்பட்டது என்பது குறித்த விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதி விவரங்களை வெளியிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ரூ.10 லட்சத்திற்கு மேல் வழங்கியவர்கள் தொடர்பான விவரங்கள், பத்திரிகை செய்திகளில் வெளியிடப்பட்டதாகவும், ஊரடங்கால் அரசு ஊழியர்கள் பணிக்கு முழுமையாக வர முடியாத காரணத்தால், மற்ற விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைளுக்காக பெறப்பட்ட நிதி தொடர்பாக மற்ற மாநிலங்களில் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் தான் வெளியிடப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எவ்வளவு நிதி பெறப்பட்டது என்பது குறித்து, இணையதளத்தில் வெளியிட என்ன சிரமம் உள்ளது என்ற கேள்வியெழுப்பினர். யார், யார், எவ்வளவு நிதி வழங்கி இருக்கிறார்கள் என்பது குறித்த முழு விவரத்தை, தமிழக அரசின் இணையதளத்தில் 8 வார காலத்திற்குள் வெளியிட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.