வெள்ளி, 3 ஜூலை, 2020

கர்நாடகாவில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் - முழு விவரம்

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான தரமான உணவுவகைகளை வழங்க மருத்துவமனைகளுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, நோயாளிகளுக்கு காலை உணவு காலை 7 மணிக்கும், மதிய உணவு மதியம் 1 மணிக்கும், இரவு 7 மணிக்கு இரவு உணவும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கொரோனா நோயாளிகளுக்கு திங்கட்கிழமை ரவை இட்லியும், செவ்வாய்க்கிழமை – பொங்கல், புதன்கிழமை – செட் தோசை, வியாழக்கிழமை – அரிசி இட்லி, வெள்ளிக்கிழமை – பிசிபேலா பாத், சனிக்கிழமை – செள செள பாத் மற்றும் ஞாயிற்றுக்கிழமை செட் தோசை வழங்கப்பட உள்ளன.
நோயாளிகளுக்கு காலை 10 மணியளவில், தர்பூசணி, பப்பாளி உள்ளிட்ட பழங்களும், வெஜிடேபிள் சூப்பும் வழங்கப்பட உள்ளன. ரவை கஞ்சியும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதிய உணவில் சப்பாத்தி, அரிசி சாப்பாடு,பருப்பு, தயிர் முட்டையுடன் வழங்கப்பட உள்ளது. மாலை 5.30 மணியளவில் வாழைப்பழம், குக்கீஸ், பேரீச்சைபழங்கள், வைட்டமின் சி நிறைந்த மாங்கோ உள்ளிட்டவைகள் வழங்கப்பட உள்ளன

இரவுநேர உணவு முடித்தவுடன், இரவு 9 மணிக்கு பிளேவர்டு பால் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து நிபுணர்கள் வழங்கிய ஆலோசனையின் பேரில் இந்த உணவுதிட்ட முறைகளை மாநில சுகாதாரத்துறை வடிவமைத்துள்ளதாக கர்நாடகா மாநில (சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை) கூடுதல் தலைமைச்செயலாளர் ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்த உணவு திட்டங்களுக்காக நோயாளி ஒன்றிற்கு ரூ.250 வீதம், ஆரோக்ய ரக்ஷா சமிதி திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜாவேத் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,272 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாநிலத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,514 ஆக அதிகரித்துள்ளது. 253 பேர் மரணமடைந்துள்ளனர். 8,063 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.