100 சதவீத கல்விக் கட்டணத்தை கட்டாய வசூல் செய்ததாக, 108 தனியார் பள்ளிகள் மீது பெற்றோர் புகார் அளித்துள்ளதாக தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள தகவலில், ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருவதால் நடப்பாண்டு கல்வி கட்டணத்தை 3 தவணைகளாக வசூல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது என கூறியுள்ளது.
இதனடிப்படையில் உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் குறித்து பெற்றோர் புகார் தெரிவிக்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் தனித்தனியே மின்னஞ்சல் முகவரிகளை வெளியிட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 108 தனியார் பள்ளிகள் 100 சதவீத கட்டண வசூலில் ஈடுபடுவதாக பெற்றோர்கள் மின்னஞ்சல் வாயிலாக புகார் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.
108 பள்ளிகளிலும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்களின் கள ஆய்வில், 100 சதவீத கல்விக் கட்டணத்தை சம்மந்தப்பட்ட பள்ளிகள் வசூல் செய்தது உறுதியானால், நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.