முன்னாள் மத்திய மந்திரி பி.சிதம்பரம் வியாழக்கிழமை தனது ட்விட்டரில், “தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான வாக்குறுதிகளை ரஃபேல் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் நிறைவேற்றவில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் கூறிய பிறகும், ஆஃப்செட் கடமைகளை அது பூர்த்தி செய்து விட்டது என்று அறிவித்து விடலாமா? என்று மத்திய அரசை கேள்வி எழுப்பினார்.
புதன்கிழமை நிலவரப்படி, ரஃபேல் உற்பத்தியாளர் ஆஃப்செட் கடமைகளை நிறைவேற்றுவதற்கான முதல் வருடாந்திர உறுதிப்பாட்டை முடித்திருக்க வேண்டும் என்று சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சமீபத்திய அறிக்கையில், ” வெளிநாட்டு விற்பனையாளர்கள் ஒப்பந்தங்களுக்குத் தகுதி பெற பல்வேறு ஆஃப்செட் கடமைகளுக்கு உறுதி அளிக்கின்றனர். ஆனால், அவற்றை நிறைவேற்றுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
ரஃபேல் போர் விமானங்கள் பற்றிய குறிப்பில், ” 36 ரஃபேல் போர் விமானங்களை டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. 30 சதவீதம் உயர் தொழில்நுட்பங்களை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (டிஆர்டிஓ) வழங்கப்படும் எனக் கூறியிருந்தது. ஆனால், இதுவரை தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு வந்து சேரவில்லை .
2005 முதல் மார்ச் 2018 வரை ரூ .66,427 கோடி மதிப்புள்ள 46 ஆப்செட் ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிரிவிக்கிறது.
“இந்த ஒப்பந்தங்களின் கீழ், டிசம்பர் 2018 க்குள், ரூ .19,223 கோடி மதிப்புள்ள திட்டங்கள் இந்தியாவில் செலவிட்டிருக்க வேண்டும் . இருப்பினும், ஆஃப்செட் கொள்கையின் மூலம் ரூ .11,396 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விற்பனையாளர்கள் சமர்ப்பித்த இந்த ஆஃப்செட் உரிமைகோரல்களில் 48 சதவீதம் (ரூ .5,457 கோடி) மட்டுமே அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ”என்று சிஏஜி குறிப்பிட்டது.
ரூ.300 கோடிக்கு மேல் கொள்முதல் செய்யப்படும் அனைத்து இறக்குமதிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தத்தில் 30 சதவீதத்தை இந்தியாவில் செலவிட வேண்டும் என்ற ஆப்செட் கொள்கையை இந்தியா 2005 இல் வகுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.