திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு திமுக தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக மேம்படுத்துதல் சட்டம், விவசாயிகள் சேவை மற்றும் விலை நிர்ணயச் சட்டம் ஆகிய 2 சட்ட மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது செய்திக் குறிப்பில். ” மத்திய அரசின் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்- விவாசாயிகளின் விளை பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கிக் கொள்ள வழிவகுக்கும் என்றும் வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு , வேளாண் சேவைகள் திருத்தச் சட்டங்கள் இந்திய விவசாயிகளின் வாழ்வில் சாவு மணி அடிக்கும் சட்டங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் சட்டங்கள். விவசாயத்துறையை அழித்தொழிக்கும் இந்த சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம். அதற்கு ஒத்துழைக்கும் அதிமுக தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளன் தெரிவித்திருந்தார்.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில், எதிர்க்கட்சிகள் விவசாயிகளை குழப்ப முயற்சிக்கின்றனர். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு புதிய வாய்ப்புகளை இந்த சட்டங்கள் ஏற்படுத்தி கொடுக்கும், நவீன தொழில்நுட்பங்களின் பலன்களை விவசாயிகளுக்கு பெற்று தரும்” தெரிவித்தார்.
இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் அரசின் நேரடி கொள்முதல் ஆகியவை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.