புதன், 23 செப்டம்பர், 2020

வேளாண் மசோதாக்களை அதிமுக ஆதரித்தது ஏன்?: முதல்வர் பழனிசாமி விளக்கம்.

Image

வேளாண் மசோதாவை ஆதரித்தது ஏன் என நீண்ட விளக்கம் அளித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அவருக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர், ராமநாதபுரத்தில் 15,605 பயனாளிகளுக்கு, 72 கோடி 81 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காவிரி குண்டாறு திட்டத்திற்கு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படும் என்றார். இந்த திட்டத்திற்காக 259 கி.மீ. தூரம் கால்வாய் வெட்டப்படும் என்றும், இந்த திட்டத்தின் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் பயன் பெறும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ராமநாதபுரம் பயணத்தை முடித்துகொண்டு, சென்னை திரும்பும் வழியில், மதுரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வேளாண் மசோதாவை அதிமுக ஆதரித்தது ஏன்? என விளக்கம் அளித்தார். வேளாண் ஒப்பந்தங்களால், விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் தமிழக விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அதிமுக ஆதரிக்காது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

தற்போதைய வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகள் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியது கட்டாயமல்ல என தெரிவித்த முதல்வர், ஒப்பந்தத்தில் உள்ளபடியே விவசாயிகளுக்கு விலை கிடைக்கும் என்றும் தெரிவித்தார். வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என உறுதி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் மசோதாவை எதிர்த்து பேசியது பற்றி எஸ்.ஆர். பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பஞ்சாப் மாநில விவசாயிகள் பயத்தினால் மட்டுமே போராடுவதாகவும்
பிற மாநிலங்களில் விவசாயிகளிடம் 8.5% வரி வசூலிக்கப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சிகள் சட்டம் குறித்து தெரியாமல் எதிர்ப்பதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர், விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்பதால் தான், நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாவை அதிமுக ஆதரித்ததாகவும் விளக்கினார்.

முதலமைச்சர், தன்னை ஒரு விவசாயி என கூறிக்கொள்ள கூடாது என எதிர்க்கட்சிகள் காட்டமாக விமர்சித்திருந்த நிலையில்,
தான் விவசாயிகளின் வலிகளை உணர்ந்தவர் என குறிப்பிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.