நீட் கெடுபிடிகளால், தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரைச் சேர்ந்த மாணவி, 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த இவருக்கு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மையம் ஒதுக்கப்பட்டது. இன்று தேர்வு எழுத அங்கு சென்ற மாணவி, கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், மெட்டி உள்ளிட்டவற்றை கழற்றி வீட்டிலேயே கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றார்.
மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில், போதிய உதவி மையங்கள் அமைக்கப்படாததால், மாணவர்கள், காவலாளிகளிடம் சந்தேகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இம்மாவட்டத்தில், 35 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில், உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், சோழவந்தா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதி வருகின்றனர். அதிகாலையிலேயே தேர்வு மையத்திற்கு மாணவர்கள் வந்த நிலையில், 11 மணிக்குப் பின்னரே 15 தேர்வர்கள் வீதம் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். போதிய உதவி மையங்கள் இல்லாததால், சந்தேகங்களை கேட்க முடியாமல் மாணவர்கள் சிரமங்களுக்கு ஆளாகினர்.
கோவையில், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால், தேர்வு மையங்களுக்கு வருவதில், மாணவர்களுக்கு பெரும் சிரமம ஏற்பட்டது. இம்மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 16 தேர்வு மையங்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வு அறைகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முக கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்த பின்னரே மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்னர். இதற்கிடையே, போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லாத சூழலில், தொலைவில் இருந்து தேர்வு மையத்திற்கு வருவதற்கு நீண்ட நேர பயணம் என்பது அலைச்சலை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.