வியாழன், 24 செப்டம்பர், 2020

மும்பை அடுக்குமாடி கட்டிட விபத்து ; பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

  திங்கள் கிழமை (21/09/2020) அன்று மும்பை தானேவில் அமைந்திருக்கும் பிவாண்டி பகுதியில் அமைந்திருந்த மூன்று மாடி குடியிருப்பு பகுதி இடிந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பலரும் சிக்கியிருக்கின்ற நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.  தமங்கர் நாகா பகுதியில் அமைந்திருக்கும் படேல் குடியிருப்பு பகுதியில் உள்ள கிலாணி கட்டிடம் அதிகாலை 03:15 மணிக்கு இடிந்து தரைமட்டமாகியது . 20க்கும் மேற்பட்ட நபர்களை இதுவரை மீட்புப்பணியினர் பத்திரமாக மீட்டுள்ளனர். 31 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த கட்டிடம் வாழ தகுதியற்றது என்றும் இங்கு குடியிருப்பது ஆபத்தில் கொண்டு போய் முடிக்கும் என்றும் பிவாண்டி – நிசாம்பூர் முனிசிபல் கார்ப்பரேசன் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் அந்த எச்சரிக்கையையும் மீறி பலர் அங்கு வசித்து வந்தனர். தரைத்தளம் மற்றும் ஒரே ஒரு மாடி பகுதியுடன் இணைந்து ஆரம்பத்தில் விசைத்தறிக் கூடமாக இது செயல்பட்டு வந்தது. 12 வருடங்களுக்கு முன்பு இதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளம், அனுமதி பெறாமல் கட்டப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.

இந்த கட்டிடத்தின் உரிமையாளர் சயத் ஜிலானி மீது இந்திய பேனல் கோட் 337, 338, 304(ii) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று மகாராஷ்ட்ர மாநில நகர மேம்பாட்டு அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். விபத்தில் சிக்கியவர்கள் பலரும் பிவாண்டியில் உள்ள இந்திராகாந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிவாண்டியில் மோசமான சூழலில் இருக்கும் 102க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.