மணாலி மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் 9.2 கிலோமீட்டருக்கு உலகின் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதைக்கான பணிகள் 10 ஆண்டுகளில் நிறைவடைந்துள்ளது. ஆனால் ஆறு ஆண்டுகளில் இதனை முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இமாச்சல பிரதேசத்தின் மணாலிக்கும், லடாக்கின் லே பகுதிக்கும் இடையே இது அமைக்கப்பட்டுள்ளது. 10,000 அடிக்கு மேல் மலையை குடைந்து இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாஜ்பாயின் நினைவாக இதனை ’அடல் சுரங்கப்பாதை’ என அழைக்கின்றனர்.
பாதுகாப்பான முறையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 60 மீட்டருக்கும் இடையே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 500 மீட்டருக்கு இடையில் அவசர பாதைகளையும் அமைத்துள்ளனர். இயற்கை சீற்றம் உள்ளிட்ட ஆபத்தான சமயங்களில் அவசரமாக வெளியேறுவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக பயணிக்கும் போது மணாலி- லேவுக்கு இடையிலான பயண தூரம் 4 மணி நேரம் வரை குறையும் என்கின்றனர்.
இந்த சுரங்கப்பாதை 10.5 மீட்டர் அகலம் கொண்டுள்ளது. மேலும் 1 மீட்டர் அகலத்திற்கு நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை கட்டி முடிப்பதற்குள் நிறைய சவால்களை எதிர்கொண்டதாக இந்தப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.